/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில்புரையூர்-கிளாகுப்பம் சாலையில் சிறு பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை
/
கோவில்புரையூர்-கிளாகுப்பம் சாலையில் சிறு பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை
கோவில்புரையூர்-கிளாகுப்பம் சாலையில் சிறு பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை
கோவில்புரையூர்-கிளாகுப்பம் சாலையில் சிறு பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 24, 2025 06:44 AM

அவலுார்பேட்டை: கோவில்புரையூர்-கிளாகுப்பம் செல்லும் சாலையில் சிறு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மலையனுார் தாலுகா கோவில்புரையூர் ஊராட்சிக்குட்பட்ட கிளாகுப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் சிறு தரைப்பாலம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.
இதில் அவலுார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் இந்த வழியாக மேல்மலையனுார் ஏரிக்கு செல்கிறது.
இங்குள்ள தரைப்பாலம் மழைக்காலத்தில் தண்ணீர் நிரம்பி அதிகளவில் மேலே செல்லும் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தரைப்பாலம் மிகவும் சேதமாகி, கற்கள் பெரிய அளவில் உள் வாங்கி பள்ளங்கள் ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பெஞ்சல் புயல் மழையின் காரணமாக அதிகளவு வெள்ளம் ஏற்பட்டு, பாலம் போக்குவரத்திற்கு லாயக்கில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மண் கொட்டி போக்குவரத்திற்கு தற்காலிக ஏற்பாட்டினை செய்தனர்.
கிளாகுப்பம் கிராமத்தில் 100 குடும்பங்களில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மழைக்காலத்தில் கோவில்புரையூர் கிராமத்திலுள்ள நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பல தேவைகளுக்காக வரும் கிராம மக்கள் கீக்களூர், செவரப்பூண்டி, அவலுார்பேட்டை வழியாக 15 கி.மீ., துாரம் சுற்றி கோவில்புரையூருக்கு செல்லும் நிலை உள்ளது.
கிளாகுப்பம், ஆதிகான்புரவடை, கொல்லைமேடு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நிலத்திலிருந்து வெளியே எடுத்துக்கொண்டு அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருவதற்கு பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கோவில்புரையூரிலிருந்து 2 கி.மீ., துாரம் உள்ள கிளாகுப்பம் கிராமத்து மக்கள் 15 கி.மீ., துாரம் சுற்றி வரும் நிலையை போக்கும் வகையில் இப்பகுதியில் புதிதாக சிறு அளவிலான மேம்பாலம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.