மோடியை மக்கள் புறக்கணிப்பார்கள் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் ஆரூடம்
மோடியை மக்கள் புறக்கணிப்பார்கள் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் ஆரூடம்
ADDED : பிப் 07, 2024 07:43 AM

விழுப்புரம் : 'தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளடக்கிய எதிர்கட்சிகளிடையே லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான பேரம் நடந்து வருகிறது' என மா.கம்யூ., மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த, மா.கம்யூ., பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகிறது.
விரைவில் முடிவுக்கு வரும். தமிழக கனமழை வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்ட நிலையில் இன்று வரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை.
தமிழகம் வந்த பிரதமர் மோடி, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கூட பார்க்கவில்லை. தமிழகத்தை மத்திய அரசு பழி வாங்குகிறது. இந்த தேர்தலில் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள்.
தமிழகத்தில் பா.ஜ., அல்லது அ.தி.மு.க., பக்கமா என பல எதிர் கட்சிகள், அவர்களுடன், எல்லா பக்கமும் கூட்டணி பேரம் பேசும் நிலை உள்ளது. அ.தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கடை விரித்து காத்துள்ளது.
தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே பிரச்னை வந்து பிரிந்து வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். அது நடக்காது. மா.கம்யூ கடந்த முறை 2 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம்.
பிரதமர் மோடி, 10 ஆண்டு கால ஆட்சி சாதனைகளைச் சொல்லாமல் தேவையின்றி அரசியல் பேசியுள்ளார். நேரு விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான், ஆனால், அவரை விமர்சிக்க பிரதமருக்கு தகுதியில்லை. தேர்தல் ஆணையத்தின் மீதே நம்பிக்கையில்லாத நிலை உள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு பதிவில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உடனிருந்தனர்.
