/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
/
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
ADDED : மே 22, 2025 03:56 AM

திண்டிவனம்: தைலாபுரத்தில் இனி நடக்கும் கூட்டங்களுக்கு அன்புமணி வருவார், அவருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், நேற்று காலை பா.ம.க., சமூக நீதிப்பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநிலம் முழுவதில் இருந்து 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து காண்டனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மாநில பொருளாளர் திலகபாமா, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அருள், சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
ஒரு காலத்தில் ஊருக்கு ஒருவர் கூட படிக்காத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தது. பத்திரத்தில் கையெழுத்து போட இடது கை பெருவிரலில் மை தடவி வைத்த இந்த சமுதாயத்தில், இன்றைக்கு 5000 வழக்கறிஞர்களை நான் உருவாக்கியிருக்கிறேன். எல்லோரும் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள்.
பல நீதிபதிகள் உச்சநீதிமன்றம் வரையில் பணிபுரிகின்றனர். எம்.பி.சி., கோட்டாவில் படித்தவர்கள். வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல, 115 சமுதாயத்திலும் பலர் வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக உருவாகியுள்ளனர். என்னுடைய உழைப்பும், போராட்டமும் தான் இதற்கு காரணம்.
சமூக நீதி பற்றி இந்திய அளவில் பேசக்கூடியவர் என்னை விட்டால் யாரும் கிடையாது. மற்றவர்களால் பேச முடியாது. நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றத்தில் சமூகநீதி இல்லை.
அன்புமணி வருவார்
தொடர்ந்து, ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, 'இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் அன்புமணி கலந்து கொள்வார். எனக்கும் அவருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. எனக்கு எப்போதும் கசப்பு பிடிக்காது, நான் இனிப்பான செய்தியைத்தான் சொல்லி வருகிறேன். நான் மருத்துவராக இருந்தும், நான் கசப்பு மருந்துகளை விட இனிப்பான மருந்தைத்தான் தருவேன்' என்றார்.
நீச்சல் குளித்தில் நீச்சலடிப்பது குறித்த கேள்விக்கு, 'திருத்துறைப்பூண்டி முதியவர் சுப்பரமணிய ஐயர் என்னிடம், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும், சீற்றம் குறையவில்லை என கூறினார். அதற்கு நான் அவரிடம், சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை, சீற்றமும் குறையவில்லை. சீற்றம் அதிகமாகிவிட்டது. அதனால் தான் நீச்சல் அடித்தேன் என கூறினேன்' என, தெரிவித்தார்.
நீச்சல் போட்டியில் மோத தயாரா
தைலாபுரம் தோட்ட நீச்சல் குளத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நீச்சல் அடிப்பது போல் சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்று நடந்த மாநில சமூக நீதி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, 'கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் உட்பட பலர் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தோம். அய்யா நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதை பார்த்து நான் உட்பட அனைவரும் அய்யா மகிழ்ச்சியுடன் இருப்பதாக நினைத்து மகிழ்ச்சியடைந்தோம்.
அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், நான் தொடர்ந்து நீச்சல் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன் என்று கூறியதுடன், பக்கத்தில் இருந்த வழக்கறிஞர் பாலுவிடம், உனக்கு நீச்சல் அடிக்க தெரியுமா என்று கேட்டதற்கு, பாலு தெரியும் என்று கூறினார். உடனே, அப்படி என்றால் என்னுடன் நீச்சல் அடிக்கும் போட்டியில் கலந்து கொள்ள வருகிறாயா என்று ராமதாஸ் கேட்டார்.
இதற்கு பாலு, கையெடுத்து கும்பிட்டு, அய்யாவுடன் நான் எப்போதும் போட்டி போடமாட்டேன் என்று கூறியது கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.