தடையை மீறி பா.ம.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்: திண்டிவனத்தில் பரபரப்பு
தடையை மீறி பா.ம.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்: திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : நவ 02, 2026 03:48 PM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் 31வது வார்டில் உள்ள கிடங்கலிருந்து பூதேரி வரையில் பழுதான சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (நவ.,2) பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி பா.ம.க.,வினர் போராட்டம் நடத்த இன்று காலை 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் எதிரே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில சமூக நீதிபேரவை செயலாளர் பாலாஜி, மாநில துணைத் தலைவர் சம்பத், மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், நகர செயலாளர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க.,நிர்வாகிகளிடம், நகராட்சி கமிஷனர் பானுமதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் கிடங்கல் – பூதேரி சாலையை சீரமைக்க நகராட்சி சார்பில் 92 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவை காண்பித்து, விரைவில் பணிகள் துவங்கும் என கூறியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, டவுன் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
