/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்: கூடுதல் போலீசாரை உடனடியாக நியமிக்க கோரிக்கை
/
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்: கூடுதல் போலீசாரை உடனடியாக நியமிக்க கோரிக்கை
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்: கூடுதல் போலீசாரை உடனடியாக நியமிக்க கோரிக்கை
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்: கூடுதல் போலீசாரை உடனடியாக நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2025 02:07 AM

விழுப்புரம்: மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் போலீசார் பற்றாக்குறை உள்ளதால், அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தகராறு உள்ளிட்ட சம்பவங்களுக்கு, போதைப்பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளன.
சாராயத்திற்கு அடுத்தபடியாக உள்ள போதை பொருட்கள், கஞ்சா, புகையிலை உள்ளிட்டவற்றை விற்போர், கடத்துவோரை பிடிக்கும் பணிகளில் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இயங்கி வருகிறது.
இந்த பிரிவு அலுவலகம் விழுப்புரம் திருச்சி சாலையில் செயல்படுகிறது.
போலீசாரின் தீவிர வாகன சோதனை, ரோந்து பணிகளின் மூலம், சாராய விற்பனை கடத்தல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
ஆனால், கஞ்சா, புகையிலையை மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவில் விழுப்புரத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரு போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
இந்த போலீசார், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் சேர்த்து போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிரிவில் இரு மாவட்டங்களையும் சேர்த்து மூன்று போலீசார் மட்டுமே பணியில் உள்ளதால், அவர்களால் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அடிக்கடி 'ரெய்டு'க்கு செல்ல முடியவில்லை. இந்த பிரிவில் குறைந்த பட்சம், 12 போலீசார் இருக்க வேண்டும்.
இதனால், சட்டம், ஒழுங்கு பிரிவு போலீசார், அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக கஞ்சா, புகையிலை வழக்குகளை போட்டு வருகின்றனர்.
பொதுவாக, 35 கிலோவிற்கு மேல் கஞ்சா, புகையிலையை பிடித்தாலும், குற்றவாளிகளை கைது செய்தாலும், சட்டம், ஒழுங்கு பிரிவு போலீசார், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதையடுத்து, இந்த போலீசார் தான் நீதிமன்றத்தில் அந்த பொருட்களை ஒப்படைத்து, பதிவேடுகளை வழங்க வேண்டும். இந்த பணிகளை செய்வதற்கு கூட போதுமான போலீசார் இல்லாததால், சட்டம், ஒழுங்கு பிரிவினர் குறைந்தளவே போதை பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இதனால், விழுப்புரம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் போதை பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதோடு, சட்டம், ஒழுங்கும் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன.
இதை முற்றிலுமாக தடுக்கும் வகையில், இரு மாவட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கும் விழுப்புரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் கூடுதலான போலீசாரை, நியமிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.