/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டை குறித்து அறிவிப்பு இல்லாததால் மக்கள் அதிருப்தி: சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் ஏமாற்றம்
/
செஞ்சி கோட்டை குறித்து அறிவிப்பு இல்லாததால் மக்கள் அதிருப்தி: சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் ஏமாற்றம்
செஞ்சி கோட்டை குறித்து அறிவிப்பு இல்லாததால் மக்கள் அதிருப்தி: சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் ஏமாற்றம்
செஞ்சி கோட்டை குறித்து அறிவிப்பு இல்லாததால் மக்கள் அதிருப்தி: சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் ஏமாற்றம்
ADDED : ஜூன் 27, 2024 11:50 PM
செஞ்சி: தமிழக அரசின் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் செஞ்சி கோட்டைக்கு என எந்த அறிவிப்பும் இல்லாதது செஞ்சி தொகுதி மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
தென் இந்தியாவில் உள்ள தரை கோட்டை, மலைக் கோட்டைகளில் முழு அமைப்புடன் உள்ள கோட்டை செஞ்சி கோட்டை. 12ம் நுாற்றாண்டில் கட்ட துவங்கி 17ம் நுாற்றாண்டு வரை விரிவுபடுத்தப்பட்டு, 12 கி.மீ., துாரத்திற்கு மதில்களுடன், மூன்று மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ள செஞ்சி கோட்டை எதிரிகள் உட்புக முடியாத வலிமையான கோட்டையாக இருந்தது.
தமிழகத்தில் அதிக போர்களை சந்தித்த பின்னரும் தனது அமைப்பு மாறாமல் உள்ள கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது.
இங்குள்ள கல்யாண மகால், தானிய களஞ்சியம், போர் வீரர்கள் குடியிருப்பு, தர்பார், போர் பயிற்சி கூடம், வெங்கட்ரமணர் கோவில் ஆகியவை இன்றளவும் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைப்பவையாக உள்ளன. அத்துடன் இங்குள்ள பறந்து விரிந்த இயற்கை சூழ்நிலையும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செஞ்சி கோட்டைக்கு வருகை தருகின்றனர்.
தமிழ் முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவின் முன்னணி நடிகர்கள் நடித்த பிரம்மாண்டமான திரைப்படங்களையும், 'டிவி' தொடர்களையும் செஞ்சி கோட்டையில் எடுத்துள்ளனர். உலக அளவில் இந்தியாவிற்கு வரும் வரலாற்று ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் செஞ்சி கோட்டையை காண தவறுவதில்லை.
தமிழகத்தில் மாமல்லபுரம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், நீலகிரி மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி ஆகியவற்றை யுனெஸ்கோ ஏற்கனவே பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க மத்திய அரசு கடந்த ஆண்டு யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பார்க்கும் இடங்களில் செஞ்சி கோட்டை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் செஞ்சி கோட்டைக்கு என தமிழக அரசு இதுவரை எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது செஞ்சியில் பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், செஞ்சி கோட்டை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும், படகு சவாரி திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அரசு பொறுப்போற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. ஆனால் சுற்றுலாத்துறை மூலம் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த முறை மானிய கோரிக்கையின் போது செஞ்சி கோட்டைக்கு முக்கிய அறிவிப்பு வரும் என செஞ்சி தொகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், செஞ்சி கோட்டைக்கு என எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. சர்வதேச அளவில் செஞ்சி கோட்டை பிரபலமாகி வருவதை உணர்ந்து மத்திய அரசு செஞ்சி கோட்டை மீது தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த நேரத்தில் மாநில அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்திருப்பது செஞ்சி தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.