/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி, வீராம்பட்டினம் புதுச்சேரியின் சக்தி திருத்தலம்... ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் திருத்தேர் உற்சவம்
/
புதுச்சேரி, வீராம்பட்டினம் புதுச்சேரியின் சக்தி திருத்தலம்... ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் திருத்தேர் உற்சவம்
புதுச்சேரி, வீராம்பட்டினம் புதுச்சேரியின் சக்தி திருத்தலம்... ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் திருத்தேர் உற்சவம்
புதுச்சேரி, வீராம்பட்டினம் புதுச்சேரியின் சக்தி திருத்தலம்... ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் திருத்தேர் உற்சவம்
ADDED : ஆக 13, 2025 11:52 PM

வீ ராம்பட்டினத்தில் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் வீரராகவ செட்டியார். ஆற்றில் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த இவரது மனைவியின் பெயர் புனிதவதி. இருவரும் காலையும், மாலையும் கடவுளை பயபக்தியடன் வணங்கி சிவபூஜை செய்து நெறியோடு வாழ்ந்து வந்தனர்.
ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்த வீரராகவ செட்டியார், ஒரு நாள் ஊருக்கு மேற்கே உள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்று வலையை வீசினார். பலமுறை வலையை வீசியும் மீன் சிக்கவில்லை. கடைசியில் கடவுளை வணங்கி வலையை வீசி இழுத்தார்.
வலை எளிதில் வரவில்லை. வலை கணத்ததால் பெரிய மீன் சிக்கியது என மகிழ்ந்து மிகவும் சிரமத்துடன் இழுத்துக் கரைக்கு கொண்டு வந்து வலையை பிரித்துப் பார்த்தார். வலையில் மீன் இல்லை. மாறாக பெரிய மரக்கட்டை இருப்பதைப் பார்த்து மனம் நொந்தார். ஏமாற்றமும் துயரமும் கொண்ட அவர், அதனை வீட்டிற்கு கொண்டு வந்து கொல்லைப் புறத்தில் போட்டார்.
மரக்கட்டையில் இருந்து பாய்ந்த ரத்தம்
ஒருநாள் வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு வீரராகவ செட்டியாரின் மனைவி காய்ந்த அந்த மரக்கட்டையை கோடாரி மூலம் பிளந்தார். அடுத்த கணம் 'அம்மா' என அலறினார். கோடாரி பட்ட இடத்தில் செங்குருதி குபீரெனப் பாய்ந்து வந்தது.
பதறிய செட்டியாரின் மனைவி புனிதவதி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து பயத்துடன் கட்டையில் இருந்து ரத்தம் வந்ததைக் கூறினார். செய்தி ஊரெல்லாம் பரவி பரபரப்பாகப் பேசப்பட்டது.
இது தெய்வத்தின் அருளே என உணர்ந்த வீரராகவ செட்டியார், அந்த கட்டையை வீட்டிற்குள் கொண்டு வந்து மஞ்சள், குங்குமமிட்டு, மலர் மாலை சார்த்தி வழிபட்டு வந்தார்.
கனவில் வந்த அன்னை
ஒருநாள் வீரராகவ செட்டியாரின் கனவில் அன்னை சக்தி காட்சி கொடுத்து, 'அன்னை பரமேஸ்வரி எனும் என்னுடைய அருள் வெள்ளத்தின் அடையாளமாக தெய்வ பக்தி நிறைந்த கட்டை உன்னிடம் வந்தது. அதை எடுத்துச் சென்று 1000 ஆண்டுகளுக்கு முன், சமாதியான சித்தரின் பீடத்திற்கு அருகே என்னுடைய உருவத்தையும் வைத்து 'செங்கழுநீரம்மன்' என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருவாயாக. உன்னுடைய குடும்பத்தையும் ஊர் மக்களையும் காத்தருள்வேன்' என கூறி அன்னை மறைந்தார்.
இந்த செய்தி ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிய வந்ததும் அன்னை சொன்ன இடத்தைத் தேடிக் கண்டு பிடித்தனர். அந்த இடம் புதர்களாலும் செடி, கொடிகளாலும் மண்டிக் கிடப்பதைப் பார்த்து இடத்தை சுத்தம் செய்ய முற்பட்டனர்.
கோவிலுக்கான இடம் கண்டுபிடிப்பு
அப்போது திடீரென அந்த இடத்தில் இருந்த புற்றில் இருந்து நாக பாம்பு படமெடுத்துச் சீறி வெளியே வந்தது. மக்கள் அஞ்சி நடுங்கினர். சீறி வந்த நாக பாம்பு தன் படத்தைச் சுருக்கி பல முறை தரையில் அடித்து மீண்டும் புற்றுக்குள் சென்று விட்டது.
இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிசயத்து நின்றனர். இது தெய்வச் செயல் என எண்ணி, நாக பாம்பு காட்டிய இடமே கோவில் அமைக்க ஏற்ற இடம் என முடிவு செய்து மண்ணைத் தோண்டினர். அவ்வாறு தோண்டியபோது ஒரு கட்டத்தில் பூமியின் ஆழத்தில் ஒரு சமாதியின் மேல் பரப்பு தென்பட்டது.
சமாதியைப் பார்த்து வியந்த மக்கள், அங்கேயே கோவில் அமைத்திட உறுதி எடுத்தனர். வீரராகவ செட்டியாரிடம் சேர்ந்திருந்த மர கட்டையைப் பீடமாக வைத்து அதற்கு மேல் அன்னை சக்தியின் தலை உருவத்தைச் சிலை விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர்.
'தேவதாரு' மரத்தால் அம்மனின் முழு உருவம்
'செங்கழுநீர் அம்மன்' என அன்னைக்குத் திருநாமம் சூட்டினார். புற்றில் இருந்து வந்த நாக பாம்பு அவ்வப்போது வெளியே வந்து அன்னையின் தலை உருவத்தைச் சுற்றி வந்து காவல் காப்பது போல் நிற்கும். இக் காட்சியைப் பார்த்து மக்கள் பயமும், வியப்பும் கொண்டு வணங்கி வந்தனர்.
சிறு கூரைக் கோவிலாக உருவாக்க பெற்று தலையை மட்டும் வணங்கிய மக்கள் காலப்போக்கில் பெருங்கோவிலையும் அம்மனின் முழு வடிவையும் அமைக்க எண்ணினர். 'தேவதாரு' மரத்தால் அம்மனின் முழு உருவமும் உருவாக்கப் பெற்றது.
அம்மன் 4 திருக்கரங்களைக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உடுக்கை, கபாலம், வாள், கப்பரை ஆகியவை அன்னையின் திருக்கரங்களில் உள்ளன. அருள் பொழியும் கண்களோடு காட்சித்தரும் அன்னை கடலை நோக்கி கிழக்குத் திசையைப் பார்த்து நிற்கிறார்.