ADDED : ஜன 22, 2024 12:43 AM
வானுார் : இடையஞ்சாவடி கிராமத்தில், கூத்து மேடையில் ரேஷன் கடை இயங்கி வருவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கான ஒன்றியப்பள்ளி அருகே சொந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது.
இந்த கட்டடம் பழுதாகி மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகியதால் வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கும் போதிய வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள கூத்து மேடைக்கு ரேஷன் கடை மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இதன் காரணமாக பொது மக்கள் நீண்ட வரிசையில் வெயில் மற்றும் மழையில் நின்று ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், பழயை ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
மேலும், ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை வைக்க இடமில்லாததால், கூத்து மேடைக்கு பின்புறம் உள்ள சிறிய அறையில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்க வேண்டிய சூழல் உள்ளது என ரேஷன் கடை ஊழியர்களும் புலம்பி வருகின்றனர்.
எனவே பொது மக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் நலன் கருதி, அப்பகுதியில் பழுடைந்தள்ள ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.