/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ரெட் அலர்ட்' எதிரொலி கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
/
'ரெட் அலர்ட்' எதிரொலி கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
ADDED : நவ 30, 2024 05:05 AM

விழுப்புரம் : மாவட்டத்தில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கண்காணிப்பு அதிகாரி தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்கக்கடலில் உருவான புயல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டதோடு, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு, புயல் கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடலோர பகுதிகளில் 12 புயல் பாதுகாப்பு மையங்களுடன், பேரிடர் மீட்பு குழுவினர்களுடன், தீயணைப்பு, காவல்துறை, மின்துறை, வருவாய்த்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை 5:00 மணி வரை இருண்ட வானிலையுடன், வேகமான குளிர்ந்த காற்று வீசியது. மாலை 5:00 மணிக்குப் பிறகு மழை பெய்யத் துவங்கியது.
விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், வானுார் என மாவட்டம் முழுதும், பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து, மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் அத்தியவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம், உடமைகளை பாதுகாப்பாக கரையில் வைத்திருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான சுன்சோங்கம் ஜடக்சிரு கடலோர பகுதியான மரக்காணம், வானுார் பகுதிகளில், கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
கடலோர பகுதியான மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் கடல் சீற்றம், படகுகள் நிறுத்துமிடம், பொது மக்களை தங்க வைக்கும் புயல் பாதுகாப்பு மையங்களிலும் பார்வையிட்டு, கனமழை புயல் மீட்புக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.