/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழையால் பாதித்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் முதன்மைச் செயலர் அமுதா பேட்டி
/
மழையால் பாதித்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் முதன்மைச் செயலர் அமுதா பேட்டி
மழையால் பாதித்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் முதன்மைச் செயலர் அமுதா பேட்டி
மழையால் பாதித்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் முதன்மைச் செயலர் அமுதா பேட்டி
ADDED : டிச 07, 2024 08:08 AM

விழுப்புரம்: 'பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அரசாணைப்படி நிவாரணம் வழங்கப்படும்' என வருவாய்த்துறை முதன்மைச் செயலர் அமுதா தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நிவாரணப் பணிகளுக்காக முகாமிட்டுள்ள வருவாய்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, நேற்று காலை விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், பெஞ்சல் புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில் 5 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புயல், கன மழையால் பாதித்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கும் பணி நேற்று முன்தினம் முதல் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. நேற்று முதல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிடும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் இந்த நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்காக விழுப்புரம், வி.சாலை, திண்டிவனம், செஞ்சி, வானுார், கண்டாச்சிபுரம் ஆகிய 6 சேமிப்பு கிடங்குகளில், வெளிமாவட்ட மண்டல மேலாளர்கள் மேற்பார்வையில், நிவாரணப் பொருட்கள் பாக்கெட் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ஒரு நாளைக்கு 6 கிடங்குகளில், 40 ஆயிரம் பாக்கெட்கள் என்றளவில் பாக்கெட் செய்யப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் பாக்கெட் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
குடியிருப்பு பகுதிகளில் மின்சார பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து விவசாயத்திற்கான மின் இணைப்பு வழங்கவும், சரிசெய்யும் பணிகள் நடக்கிறது.
பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் உணவுகள் சமைத்து வழங்கப்படுவது குறைந்துள்ளது. நேற்றும், பாதித்த பகுதிகளில் 17 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இயல்பு நிலை திரும்பாமல் உள்ள மக்களுக்கு, உணவு தயாரித்து வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் நிவாரணம் என்பது குறித்து, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு முதன்மைச் செயலர் அமுதா கூறினார்.
கலெக்டர் பழனி, நெடுஞ்சாலை துறை அரசு செயலர் செல்வராஜ், கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையா உடனிருந்தனர்.