/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எண்ணெய் பனை பயிரிட விவசாயிகளுக்கு... வேண்டுகோள்; வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆலோசனை
/
எண்ணெய் பனை பயிரிட விவசாயிகளுக்கு... வேண்டுகோள்; வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆலோசனை
எண்ணெய் பனை பயிரிட விவசாயிகளுக்கு... வேண்டுகோள்; வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆலோசனை
எண்ணெய் பனை பயிரிட விவசாயிகளுக்கு... வேண்டுகோள்; வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆலோசனை
ADDED : செப் 16, 2024 06:21 AM

விழுப்புரம்: எண்ணெய் பனை பயிரானது, மாதத்திற்கு இருமுறை அறுவடையாகி, இரு மடங்கு வருமானத்தையும் ஈட்டித்தருவதோடு, குறைந்தபட்ச ஆதார விலையும் தோட்டக்கலைத்துறையால் நிர்ணயம் செய்வதால், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், அதிகளவில் சாகுடி செய்ய முன்வர வேண்டும் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், வழக்கமான நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களோடு, தோட்டக்கலைப் பயிரான எண்ணெய் பனையும் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, 270 ெஹக்டர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, விக்கிரவாண்டி, மயிலம், கோலியனூர், கண்டமங்கலம், மரக்காணம், முகையூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வானூர் ஆகிய வட்டாரங்களில், எண்ணெய் பனை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.
தமிழக அரசு தோட்டக்கலைத்துறையின் மூலம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்-எண்ணெய் பனை என்னும் திட்டத்தின் வாயிலாக, எண்ணெய் பனையை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பரப்பு விரிவாக்கம் என்ற இனத்தில் 100 சதவீதம் மானியமும், ஊடுபயிர் மற்றும் பராமரிப்புக்கு ஒரு ெஹக்டருக்கு ரூ.10,500 மானியமும், உற்பத்திக்கான ஊக்கத் தொகையும் வழங்கி வருகிறது.
மேலும், அறுவடை பயன்பாட்டுக்கு அலுமினிய ஏணி வழங்குதல், மின் கலப்பை, மின் மோட்டார் வாங்குதல் ஆகிய பல்வேறு இனங்களில், விவசாயிகளுக்கு மானியங்கள் அளித்து ஊக்குவிக்கிறது. விவசாயிகளுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மயிலம் வட்டாரம் முப்புளி கிராமத்தில் காளிதாஸ் என்ற விவசாயி எண்ணெய் பனை சாகுபடிசெய்து வருகின்றார். அவரது வயலில் நோய் தாக்குதல் புகார் கூறியதால், இது குறித்து வேளாண்துறை குழு ஆய்வு செய்வதற்காக நேரில் வந்தது.
விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் தலைமையில், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், விஞ்ஞானி செந்தமிழ், மயிலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அப்துல்லத்தீப், தோட்டக்கலை அலுவலர் ராஜலட்சுமி, அக்ரொவட் பராமரிப்பு நிறுவனத்தை சார்ந்த ராமு, ஏழுமலை உள்ளிட்டோர், ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ரவிச்சந்திரன் என்பவர் காணொளி வாயிலாகவும், இந்த நேரடி வயலாய்வில் கலந்துகொண்டனர்.
அக்குழு ஆய்வு செய்து, எண்ணெய் பனை மரங்களின் வளர்ச்சி நிலை, பயிர் பராமரிப்பு மற்றும் சாகுபடி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன், மகசூல் விவரம் மற்றும் லாபம் குறித்து, அப்பகுதி விவசாயியிடம் கேட்டறிந்து விளக்கினர். விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, உயிரியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர்.
அப்போது அக்குழுவினர் விவசாயிகளிடம் கூறுகையில், எண்ணெய் பனை பயிரானது, மாதத்திற்கு இரண்டு முறை அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இரு மடங்கு வருமானத்தை ஈட்டித்தருகிறது. இப்பயிரின் குறைந்தபட்ச ஆதார விலையானது, தோட்டக்கலைத்துறையின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், லாபகரமான பயிரான, எண்ணெய் பனையை விவசாயிகள் ஆர்வமாக சாகுடி செய்து லாபம் பெற முன்வர வேண்டும் என்றனர்.