/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மகளிர் கல்லுாரி சாலை சீரமைக்க கோரிக்கை
/
அரசு மகளிர் கல்லுாரி சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 10, 2025 04:04 AM
விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரிக்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலமேடு எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரிக்கு சாலை செல்கிறது. இச்சாலை வழியாக கல்லுாரி மாணவிகள் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள நகர்களின் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர்.
இந்த சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கல்லுாரி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், இச்சாலையை சீரமைக்கும் பணிகள் சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக சாலை பெயர்த்து போடப்பட்டுள்ளதால், ஜல்லி கற்கள் சிதறிக் கிடக்கிறது. இதில் பயணம் செய்வதில், மாணவிகள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

