/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்... ஸ்டிரைக்; பொதுமக்களுக்கான பணிகள் பாதிப்பு
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்... ஸ்டிரைக்; பொதுமக்களுக்கான பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்... ஸ்டிரைக்; பொதுமக்களுக்கான பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்... ஸ்டிரைக்; பொதுமக்களுக்கான பணிகள் பாதிப்பு
ADDED : நவ 27, 2024 04:58 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தால், வருவாய்த்துறை தொடர்பான பொது மக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், நேற்று காலை முதல் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திலும், நேற்று காலை 10:00 மணிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், துணைத் தலைவர்கள் மோகனப்பிரியா, சாருமதி, கண்ணன், இணைச் செயலாளர்கள் பழனி, பிரசாத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வருவாய்த் துறையில் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட, அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை களைந்து, ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும்.
வருவாய்த் துறையில் உள்ள பணியிடங்களை கலைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையை அரசு முற்றிலும் தவிர்த்து, வருவாய்த்துறை பணியிடங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையிலான ஊழியர்கள் 350 பேர் வரை பணியை புறக்கணித்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் மற்றும் 9 தாலுகா அலுவலகங்கள், விழுப்புரம், திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், ஊழியர்களின்றி வெறிச்சோடியது.
போராட்டம் காரணமாக, வருவாய்த்துறை வழங்கும் 15 வகையான சான்றிதழ்கள் பணிகள், பட்டா மாற்றம், நில அளவை தொடர்பான பொதுமக்களுக்கான பணிகள், மழைக்கால முன்னேற்பாடு பணிகளும் பாதிக்கப்பட்டன.
திண்டிவனம்
திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பாக நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.
சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.
வானுார்
தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, தனி தாசில்தார் சரவணன், வட்ட தலைவர் கவுதமன், செயலாளர் பார்த்திபன், பொருளாளர் வெங்கடேஸ்வர பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.