/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அழுகல் நோய் தாக்குதல் முந்திரி விளைச்சல் பாதிப்பு
/
அழுகல் நோய் தாக்குதல் முந்திரி விளைச்சல் பாதிப்பு
ADDED : ஏப் 15, 2025 04:41 AM

முந்திரி கொட்டைகளை அழுகல் நோய் தாக்கி வருவதுடன், முள்ளம் பன்றி, காட்டுப்பன்றிகள் குதறி வருவதால் ஆரோவில் விவசாயிகள் கதறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சுற்றியுள்ள, குயிலாபாளையம், பொம்மையார்பாளையம், மாத்தூர் உள்ளிட்ட விவசாயிகள் பல ஏக்கர் முந்திரி தோப்புகளை பராமரித்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் அனைத்து முந்திரி கொட்டைகளும் பண்ருட்டிக்கு அனுப்படுகிறது. அங்கு கொட்டை உடைத்து, பதப்படுத்தி பின்பு முந்திரி பருப்புகளாக வெளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் ஒரு லட்சம் மூட்டைக்கு மேல் ஆரோவில் பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டு வந்ததது. இந்தாண்டும் முந்திரி விளைச்சல் அபாரமாக வளர்ந்து, மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் 2 நாட்கள் பெய்த திடீர் மழையால் முந்திரி மரங்களில் இருந்த பெரும்பாலான பூக்களில் அழுகல் ஏற்பட்டு முந்திரி விளைச்சலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
இது மட்டுமின்றி முந்திரி தோப்புகளில் பெருகியுள்ள முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றிகள் விளைந்திருந்த முந்திரி கொட்டைகளை கடித்து குதறி போட்டு வருகிறது. இதனால் இந்தாண்டு முந்திரி உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பன்ரூட்டிக்கு முந்திரி கொட்டைகள் இருந்து இறக்குமதி செய்யப்படும். வெளிநாடுகளில் விலை அதிகரிப்பால், இந்தாண்டு இறக்குமதியை பண்ருட்டி வியாபாரிகள் குறைந்துள்ளனர். அதனால் ஆரோவில்லில் இருந்து வாங்கப்படும் முந்திரிக் கொட்டைகளை ஒரு கிலோ ரூ.125க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் முந்திரி விளைச்சல் குறைவால் விவசாயிகளின் வருவாய் பாதித்துள்ளது.