/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி! உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் தீவிரம்
/
நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி! உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் தீவிரம்
நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி! உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் தீவிரம்
நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி! உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 08, 2025 11:39 PM

விழுப்புரம்; மாவட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 2025-26 ம் ஆண்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணாவாரி நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நெல் சாகுபடி பரப்பை அதிகரித்தல், உற்பத்தி திறன் மேம்பாடு, சாகுபடி செலவை குறைத்தல், விளைச்சலை அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல் , மண்ணின் வளத்தை மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தாண்டு முதல், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம், செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் படி, விழுப்புரம் மாவட்டத்தில்,18 ஆயிரத்து 40 ஏக்கரில் (ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம்), நெல் இயந்திர நடவிற்காக மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் 7 கோடியே 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல் இயந்திர நடவு முறையால் நெல்லின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், செலவு குறைந்து விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கின்றது.
இதேபோல், 15 ஆயிரத்து 298 ஏக்கர் நெல் பயிருக்கு, நுண்ணுாட்ட உரக்கலவை மானிய விலையில் ( ஒரு ஏக்கருக்கு ரூ.147.60 மானியம்) வழங்கப்படுகிறது.
திரவ உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், அசோபாஸ், பாஸ்போ பாக்டீரியா ) 22 ஆயிரத்து 580 ஏக்கருக்கு மானியத்துடன் ( ஒரு ஏக்கருக்கு ரூ.60 மானியம்) வழங்கப்படுகிறது.
உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக் கலவை பயன்படுத்துவதால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு பயிரின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கின்றது.
இத்துடன், சான்று பெற்ற விதை நெல் மானியத்துடன் ( ஒரு கிலோவிற்கு ரூ.20 மானியம்) 147.40 மெட்ரி டன், தரச் சான்று பெற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில்,'விழுப்புரம் மாவட்டத்தில் நெல்சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்,' என்றனர்.