ADDED : டிச 16, 2024 12:46 AM

விழுப்புரம்; மார்கழி மாதம் இன்று துவங்குவதால் வண்ண கோலமாவு விற்பனையும் துவங்கியது.
கார்த்திகை மாதம் முடிந்து இன்று மார்கழி மாதம் துவங்கியது. மாதத்தில் உயர்ந்ததாகவும், அனைத்து துன்பங்களும் நீங்கி, தை மாதத்தில் புதுவாழ்வு அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதம் மார்கழியாகும்.
இதனால், பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் வாசலில் தண்ணீர் தெளித்து வண்ண கோலமிட்டு, பூசணி பூ வைத்து அலங்கரித்தும், பாவை விரதமிருந்து, இறைவனை வழிபடுவது வழக்கமாகும்.
விழுப்புரத்தில் மார்கழி முழுவதும் வண்ண கோலமிடுதல் தொடரும் என்பதால், வண்ண கோலமாவு உற்பத்தியும், விற்பனையும் துவங்கியுள்ளது.
விழுப்புரம் திரு.வி.க., வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வண்ண கோலமாவு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஒரு பாக்கெட் 10 முதல் 50 வரை ரூபாய வரை விற்பனையானது. திண்டிவனம், வானுார், விழுப்புரம் பகுதிகளில் இந்த கோலமாவு தயாரித்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

