ADDED : அக் 02, 2024 03:03 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த அரசு பள்ளி சீருடைகளை பொது மக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி, திருவாமத்துார் அடுத்த முத்தையால்பேட்டையில் விழுப்புரம் - செஞ்சி சாலையோரம் நேற்று முன்தினம் காலையில் அரசு பள்ளி சீருடைகள் மற்றும் பள்ளி பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தேவையான அளவுக்கு அள்ளிச் சென்றனர்.
தகவல் அறிந்த திருவாமத்துார் வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ., குமார் சம்பவ இடத்திற்குச் சென்று மீதமிருந்த அரசு பள்ளி சீருடைகள், பள்ளிப் பைகள் ஆகியவற்றை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் பள்ளி சீருடைகள் கிடந்தது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

