/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதை நெல் சுத்திகரிப்பு நிலையம்: செஞ்சியில் திறக்க விவசாயிகள் கோரிக்கை
/
விதை நெல் சுத்திகரிப்பு நிலையம்: செஞ்சியில் திறக்க விவசாயிகள் கோரிக்கை
விதை நெல் சுத்திகரிப்பு நிலையம்: செஞ்சியில் திறக்க விவசாயிகள் கோரிக்கை
விதை நெல் சுத்திகரிப்பு நிலையம்: செஞ்சியில் திறக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 12:14 AM
செஞ்சி : செஞ்சியில் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி பகுதி விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளையும் நெல்லில் இருந்தே விதை நெல் எடுக்கின்றனர். ஒரே நிலத்தில் விளையும் நெல்லை தொடர்ந்து மூன்று ஆண்டு கள் விதையாக பயன்படுத்தினால் விதையின் வீரியம் குறைந்து மகசூல் பாதிக்கும்.
எனவே 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் புதிதாக நெல் விதைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த விதைகளைஅரசு வேளாண்மை விரிவாக்கமையங்களிலும், தனியார் விதைப் பண்ணை களிலும் வாங்குகின்றனர்.
விவசாயிகளுக்காக வேளாண்மைத்துறை மூலம் செஞ்சி, அனந்தபுரம், வல்லம், பென்னகர், மேல்மலையனுார், அவலுார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அரசு விதை விற்பனை மையங்கள் மூலம் ஆண்டுக்கு 180 டன் அளவிற்கு விதைகளை விற்பனை செய்கின்றனர்.
இந்த விதை விற்பனை மையத்திற்குத் தேவையான விதைகளை வேளாண்மைத் துறையினர் செஞ்சி பகுதியில் உள்ள விவசாயிகளிடமே வாங்குகின்றனர். இதற்கான விவசாயிகளை வேளாண்மைத் துறையினர் தேர்வு செய்து, பயிர்களை கண்காணித்து விதை நெல்கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு முன் அதை சுத்தம் செய்து பதப்படுத்த வேண்டும். இதற்காக விவசாயிகள் காகுப்பம், இருவேல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள அரசு நெல் விதை சுத்திகரிப்பு மையங்களுக்கு சொந்த செலவில் கொண்டு சென்று, விதைகளை சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு வீண் அலைச்சலும், கூடுதல் செலவும் ஆகிறது. இதன் காரணமாக விதை நெல் தயார் செய்வதற்கு செஞ்சி பகுதி விவசாயிகள் முன் வருவதில்லை. இதனால் வேளாண்மைத் துறையினர் செஞ்சி பகுதிக்குத் தேவையான நெல் விதைகளை முழுமையாக செஞ்சி பகுதியில் கொள்முதல் செய்ய முடியாமல் பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.
இந்த விதைகள் சில நேரம் செஞ்சி பகுதி மண்ணுக்கு நல்ல மகசூல் தருவதில்லை. அத்துடன் சீசன் நேரங்களில் அரசு விதைப் பண்ணைகளில் விதை நெல் பற்றக்குறை ஏற்படுகிறது.
இது போன்ற நாட்களில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து விதை நெல்வங்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் செஞ்சி பகுதியில் விளைவிக்கும் நெல் ரகமும் கிடைப்பதில்லை.
எனவே, நெல் அதிகம் விளையும் செஞ்சி அல்லது மேல்மலையனுார் பகுதியில் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.