/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளைவு இன்றி சர்வீஸ் சாலை: பொதுமக்கள் கோரிக்கை
/
வளைவு இன்றி சர்வீஸ் சாலை: பொதுமக்கள் கோரிக்கை
ADDED : பிப் 19, 2024 05:28 AM

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் பகுதியில் விபத்துகளை தவிர்க்க வளைவுகள் இன்றி சர்வீஸ் சாலைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு நான்கு வழிச்சாலை அமைத்த போது முண்டியம்பாக்கம் கிராம பகுதியில் முறையாக கவனம் செலுத்தி சாலை அமைக்காததால், கிராமத்தின் முக்கிய பகுதியில் வளைவுடன் கூடிய சாலை அமைக்கப்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் வரும் போது எதிர் முனையில் பார்வை கிடைக்காததால் பஸ் நிறுத்தம் பகுதியிலும் , சர்க்கரை ஆலை ரோடு பிரியும் இடங்களிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக நகாய் சார்பில் சர்க்கரை ஆலைக்கு ரோடு பிரியும் இடத்தின் அருகிலிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே வரை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
மேம்பால பணிக்காக சாலையின் இருபுறமும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெட்ரோல் பங்க்கிற்கு செல்லும் வாகனங்கள், புதுச்சேரி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் எந்நேரமும் பயணிக்கும் பரபரப்பான சர்வீஸ் சாலையாக உள்ளது.
எனவே, சாலை விரிவாக்க பணியின் போது பைபாஸ் சாலையின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட உள்ள சர்வீஸ் சாலையை முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதி வரை சாலை வளைவுகளை நேர் செய்து வடக்கு பகுதியிலிருந்து சர்வீஸ் சாலையில் வருகின்ற வாகனங்கள் தெளிவாக தெரியும்படி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகாய் அதிகாரிகள், பொறியாளர்கள் உதவியுடன் சாலையை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

