ADDED : ஆக 15, 2025 11:07 PM

கண்டாச்சிபுரம்,; கண்டாச்சிபுரம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். முகையூர் வட்டார இன்ஜினியர் குணசேகரன் பற்றாளராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள், குளம், ஏரி பராமரிப்பு, மகளிர் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக தேசிய கொடியேற்றப்பட்டது.
திண்டிவனம் தென்களவாய் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி, கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து பேசினார். கூட்டத்தில், குடிநீர் பிரச்னை, சாலை வசதி உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவலுார்பேட்டை மேல்மலையனுார் அடுத்த மேலச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். தாசில்தார் தனலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குளத்தை சீரமைக்கவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விக்கிரவாண்டி வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் தனலட்சுமி ரவி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், ஆத்மா திட்ட குழு தலைவர் வேம்பி ரவி ,துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வாசு தீர்மானங்களை படித்தார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் மகளிர் சுய குழுவினர் கோரிக்கை படி மகளிர் ஒருங்கிணைப்பு குழு கட்டடம் கட்ட இடத்தை தேர்வு செய்தும், முதல்வர் காப்பீடு திட்டம், மாற்றுத்திறனாளிகள் குழு கட்டடம், சுடுகாடு இடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார்.
வேளாண் உதவி இயக்குநர் கங்கா கவுரி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜி, வி.ஏ.ஓ., , விஸ்வரங்கம் பங்கேற்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் எரளூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குப்பம்மாள் வரவேற்றார். கூட்டத்தில் ஏனாதிமங்கலம் சாலையில் நிழற்குடை அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வி.ஏ.ஓ., அன்பழகன்,ஊராட்சி செயலாளர் துரைமுருகன், வார்டு உறுப்பினர்கள் மணி, நாகராஜ்,கல்வி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிரி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.