ரூ.6.50 கோடியில் அருங்காட்சியக கட்டடம் கட்டும் பணி துரிதம்:தொல்லியல் பொருட்களை சேகரிக்க நடவடிக்கை தேவை
ரூ.6.50 கோடியில் அருங்காட்சியக கட்டடம் கட்டும் பணி துரிதம்:தொல்லியல் பொருட்களை சேகரிக்க நடவடிக்கை தேவை
UPDATED : ஜூலை 28, 2026 05:53 PM
ADDED : ஜூலை 28, 2026 05:52 PM

விழுப்புரம்:விழுப்புரத்தில் புதிய அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருவதால், அதனை செயல்படுத்த, தொல்லியல் பொருட்களை சேர்க்கும் பூர்வாங்கப் பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்து வரும் பழமையான வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்கவும், காட்சிப்படுத்தவும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை ஏற்று, கடந்த தி.மு.க., ஆட்சியில் 6.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்காக, விழுப்புரம் அடுத்த கோலியனுார் கூட்ரோடு பனங்குப்பத்தில், விழுப்புரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டு, ஒன்றரை ஏக்கர் பரப்பில், அதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 1,300 சதுரடி பரப்பில் 2 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.
அருங்காட்சியகம், ஆடிட்டோரியம், கலையரங்கம், நுாலகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைய உள்ளது. ஓராண்டு காலத்தில் பணிகள் முடித்து, புதிய அருங்காட்சியக கட்டடம் தயாராகும் விதத்தில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
புதிய கட்டடத்தில் அருங்காட்சியகத்தை நிறுவிட போதிய பூர்வாங்க பணிகளை அருங்காட்சியக துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் அருங்காட்சியக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
விழுப்புரம் அருங்காட்சியகத்தின் உள்கட்டமைப்பிற்கான முன்னேற்பாடுகளை அருங்காட்சியகங்கள் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும். மாவட்ட தொன்மை வரலாறு, வரலாற்றுச் சின்னங்கள் குறித்த முழுமையான விபரங்களை முறையாக தொகுக்க வேண்டும்.
புதிதாக உருவாகும் அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான பழமை வாய்ந்த சிற்பங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், கலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இப்போது முதலே சேகரிக்கத் தொடங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான கல்வெட்டுகள், சிற்பங்கள் பாதுகாப்பின்றி இருக்கின்றன. அவற்றை வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் உதவியுடன் மீட்டெடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்கள், அந்தந்த தாலுகா அலுவலக கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதனையும் சேகரிக்க வேண்டும்.
ஆங்காங்கே கிடைத்து வரும் பழமை வாய்ந்த அரும்பொருட்களை, அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கவும், அருங்காட்சியகம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.
தனி நபர்கள் வசமுள்ள வரலாற்றுத் தடயங்களையும் பெறவேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைக்க துறை சார்ந்த அலுவலர்கள், அறிஞர்கள் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி, அருங்காட்சியகத்துறை இயக்குநருக்கும், விழுப்புரம் கலெக்டருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.
