
விழுப்புரம்; விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்கள் 123 பேர், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்ட அளவில், 39வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்பள்ளி மாணவர்கள், கைப்பந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், ஜூடோ, கோலுான்றி தாண்டுதல், நீச்சல், குத்துச்சண்டை, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், டைக்குவாண்டோ, சிலம்பம், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
இதன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற 123 மாணவ, மாணவிகளும், விழுப்புரம் கலெக்டர் பழனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பள்ளி செயலாளர் ஜனார்த்தனன், பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தமிழ்மணி உடனிருந்தனர்.