ADDED : ஜூலை 03, 2025 01:22 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி திட்டத்தில், 5 மாவட்ட பயிற்சியாளர்களுக்கு வரும் 6ம் தேதி பயிற்சி பட்டறை நடக்கிறது.
சிறுவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை துாண்டும் வகையில், விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளிகளில் 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்திட்டம் கடந்த 23ம் தேதி துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாணவர்களுக்கு மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், யோகா, கபடி, கோ கோ, தடகள பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த பயிற்சியாளர்களுக்கு, அந்தந்த விளையாட்டுகளில் சிறந்த வல்லுநர்கள் மூலம் வரும் 6ம் தேதி விழுப்புரத்தில் 'ஒரு நாள்' பயிற்சி பட்டறை நடக்கிறது.
இதில், விழுப்புரம் 18, கடலுார் 18, திருவண்ணாமலை 9, திருச்சி 9, கள்ளக்குறிச்சி 9 என மொத்தம் 63 பள்ளிகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சிறந்த முறையில் கற்றுக்கொடுப்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.