/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு
/
மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு
ADDED : பிப் 17, 2024 06:22 AM
விக்கிரவாண்டி, : விழுப்புரம் மாவட்டத்தில் ஆவண பதிவிற்கு முத்திரைத்தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு பத்திர பதிவு துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கணிசமான வருவாய் கிடைக்கிறது. விழுப்புரம் மாவட்ட கருவூலத்திலிருந்து விழுப்புரம், திண்டிவனம், வானுார், செஞ்சி ஆகிய துணை கருவூலங்களுக்கு தேவையான அளவிற்கு முத்திரைத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டு முகவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது விழுப்புரம் துணை கருவூலத்திலிருந்து முத்திரைத் தாள்கள் விழுப்புரம், அனந்தபுரம், வளவனுார், விக்கிரவாண்டி வழுதாவூர் பகுதியில் உள்ள முகவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
விழுப்புரம் துணை கருவூலத்தில் அதிக முக மதிப்புடைய 25, 15, 10 மற்றும் 5,000 முக மதிப்பில் உள்ள முத்திரைத் தாள்கள் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது சொத்து ஆவணப்பதிவு செய்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட தலைமைக் கருவூல அலுவலர் இது குறித்து துரித நடவடிக்கை எடுத்து மாவட்ட கருவூலம் மூலம் ஏற்கனவே முத்திரை தாள்கள் விநியோகித்து விற்பனையாகாமல் இருப்பில் உள்ள அருகில் உள்ள திண்டிவனம், வானுார் கருவூலங்களிலிருந்து பெற்று விழுப்புரம் துணை கருவூலத்திற்கு விநியோகித்தால் தட்டுப்பாடு நிலை குறையும்.
அதே போன்று அருகில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும் பெற்று இங்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.