ADDED : மே 27, 2025 07:11 AM
மரக்காணம்; மரக்காணம் அடுத்த வன்னிபேர் கிராமத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானாவரி நிலங்களில் கோடை உழவு பணி துவக்க விழா நடந்தது.
மாவட்ட வேளான்மை இணை இயக்குனர் ஈஸ்வர் தலைமை தாங்கி பேசியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகின்றது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு கோடை உழவு பணியை மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு பணி செய்வதின் மூலம் மழை நீறை சேகரித்து மறு செரிவூட்டவும், மண் அரிப்பை தடுத்து மண்ணின் கட்டமைப்பு மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரித்து வேளாண் கழிவு பொருட்களை மக்க வைக்கவும், முந்தைய பயிர் சாகுபடியில் எஞ்சிய பூச்சிகளில் முட்டைகள், கூட்டுபுழுகளை வெளி கொண்டு வந்து அழிக்கவும் பயன்படுகின்றது. நம் முன்னோர்கள் கூறியது போல் கோடை உழவு கோடி நன்மை கொடுக்கும். மேலும் நடப்பாண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோடை உழவு பணி மேற்கொள்ள 50 சதவீதம் மானியமாக ரூ. 800 பின்னேற்பு மானியமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் வரை வழங்கப்படும் என கூறினார்.
மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ், துணை வேளாண் அலுவலர் கதிரேசன், ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி வேளாண் அலுவலர் ராஜேஷ்வரி, உதவி தொழில் நுட்ப அலுவலர்கள், சந்திரசேகர், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.