ADDED : ஜூலை 15, 2025 09:06 PM
வானுார்; காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி, வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் பிரிட்டோ மகன் விபாலி ஜோ, 29; இவர் ஆரோவில், குயிலாப்பாளையம் தனியார் கெஸ்ட் அவுசை வாடகைக்கு எடுத்து நடத்த முடிவு செய்து, அந்த பகுதியில் வந்து தங்கியிருந்தார்.
நேற்று காலை பைக்கில், கோரிமேடு அருகே உள்ள, எலக்ட்ரிக்கல் கடைக்கு புதுச்சேரி-திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி நோக்கி சர்வீஸ் சாலையில், சென்றார். அப்போது ஓரமாக நின்றிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் கதவு திடீரென திறந்ததால், அதில் மோதி நிலை தடுமாறினார். இந்நிலையில், எதிரில் புதுச்சேரி நோக்கி வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார்.
ஆரோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.