/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்
/
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்
ADDED : மே 31, 2025 01:04 AM

செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை சூர்ய பிரபை வாகனத்திலும், மாலை ஹம்சவாகனதில் சாமி வீதி உலா நடந்தது. 26ம் தேதி சிம்ம வாகனத்திலும், 26ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 27 ம் தேதி சேஷ வாகனத்திலும், 28ம் தேதி கருட சேவையும், 29ம் தேதி யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது.
7ம் நாள் விழாவாக நேற்று திருக்கோவில் சார்பில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து, 8 மணிக்கு தேரில் ஏற்றினர். 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது.
மஸ்தான் எம்.எல்.ஏ., வடம் பிடித்து உற்சவத்தை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி., ஏழுமலை, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். மாடவீதிகள் வழியாக தேர் பவனி வந்த போது பக்தர்கள் நாணயம், காய்கறிகள், தானியங்களை வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
8ம் நாள் விழாவாக இன்று குதிரை வாகனத்திலும், நாளை சந்திரபிரபை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.