/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் கண்டெடுப்பு
/
வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் கண்டெடுப்பு
வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் கண்டெடுப்பு
வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் கண்டெடுப்பு
ADDED : அக் 09, 2025 03:11 AM

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சென்னை விவேகானந்தா மிஷன் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெயப்பிரதா, கவுரவ விரிவுரையாளர் அரிஹரசுதன் ஆகியோர், வீடூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
இது குறித்து, மாயகிருஷ்ணன் கூறுகையில், இந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பண்டைய காலத்தில் தெற்கு ஆசியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டவை.
இவ்வெழுத்துக்கள் அசோக பிராமி, தென்பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளிலிருந்து வேறுபட்டதோடு, அதற்கு முந்தைய முறைமையாகும்.
தமிழ் எழுத்துக்கள், குகை பிராமி படுக்கைகள், மட்கல ஓடுகள், நாணயங்கள், முத்திரை அச்சுகள், மோதிரங்கள், முதுமக்கள் தாழிகளில் எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஆதிச்சநல்லுார், முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம், கொடுமணல் மற்றும் தர்மநல்லுார் ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன. மேலும், புதுச்சேரி அரிக்கமேட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது, விழுப்புரம் மாவட்டம் வீடூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில், இரண்டு பானை ஓடுகளில், நோறாப மற்றும் பசீ ஆகிய தமிழிசொற்கள் (தமிழ் பிராமி) குறிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பானை ஓட்டில், தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ஊர் வரலாற்று பாரம்பரியமிக்க ஊராகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.