/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் கெடு! 13ம் தேதிக்குள் நிலுவைப் பணிகளை முடிக்க உத்தரவு
/
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் கெடு! 13ம் தேதிக்குள் நிலுவைப் பணிகளை முடிக்க உத்தரவு
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் கெடு! 13ம் தேதிக்குள் நிலுவைப் பணிகளை முடிக்க உத்தரவு
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் கெடு! 13ம் தேதிக்குள் நிலுவைப் பணிகளை முடிக்க உத்தரவு
ADDED : மே 08, 2024 03:57 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, நிலுவையில் உள்ள குடிநீர் திட்டப்பணிகளை வரும் 13ம் தேதிக்குள் விரைந்து முடித்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பின் கலெக்டர் பழனி கூறியதாவது: கோடைகாலத்தில், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மாவட்டத்தில் கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நிலுவை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோடை வறட்சி காலங்களில், இதர மாற்று நீர் நிலை ஆதாரங்களிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய வசதியாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீருக்கு, உகந்த ஆதாரங்களைக் கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்கவும், அனைத்து ஊராட்சிகளுக்கும் அதற்கான கள ஆய்வு பெட்டி வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு ஊராட்சி செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, நீர் தரம் பரிசோதனை செய்யும் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
முகையூர் ஒன்றியம் பரனுார், மரக்காணம் ஒன்றியம் கீழ்பேட்டை ஊராட்சிகளில், கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர், 24 மணி நேரமும் மெயின் பைப்லைனில் இருந்து, மோட்டார் மூலம் விதிமீறி எடுக்கப்படுவதை துண்டிப்பு செய்யவும், குடிநீர் விநியோகம் செய்யும் இணைப்பிலிருந்து இணைப்பு வழங்கவும், ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில், 15வது மத்திய மானிய பொது நிதி, எம்.எல்.ஏ, - எம்.பி., நிதிகள் மற்றும் அயோத்திதாஸ் திட்டம் ஆகியவற்றில் நடந்து, நிலுவையில் உள்ள குடிநீர் திட்ட பணிகள், ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை விரைந்து முடிக்க சிறப்புத்திட்டம் தயார் செய்திட வேண்டும். வரும் மே 13ம் தேதிக்குள் 70 சதவீதம் பணிகளை முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

