/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: 75 பேர் கைது
/
மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: 75 பேர் கைது
ADDED : ஜூலை 09, 2025 11:58 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாய தொழிற்சங்க கூட்டமைப்பினர், 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாதர் சங்க கூட்டமைப்பினர், அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து, மத்திய அரசை கண்டித்து நேற்று காலை 11:00 மணிக்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தாண்டவராயன், மாவட்ட செயலர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் சுந்தரமூர்த்தி, மாதர் சங்க மாநில துணை செயலர் கீதா, மாவட்ட பொருளாளர் சித்ரா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து ரயில் நிலைத்திற்கு காலை 11:20 மணிக்கு, திருப்பதி-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் வந்தபோது, அதன் முன்பு செல்ல முயன்றனர்.
அப்போது, ரயில் நிலைய வாயில் பகுதியிலேயே பேரி கார்டுகள் போட்டு, ஏ.டி.எஸ்.பி., தினகரன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு முயன்ற, 10 பெண்கள் உள்ளிட்ட 75 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மதியம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.