ADDED : அக் 05, 2024 04:04 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பரசுரெட்டிபாளையம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேன்மொழி வரவேற்றார். முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை விரிவாக்கத்துறை உதவி மேலாளர் தேவராஜ் சொட்டுநீர் பாசன மானியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார்.
கோட்ட கரும்பு அலுவலர் ஞானசுந்தரம் கரும்பில் புதிய நிர்ணய விலை மற்றும் புதிய கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்தால் ஏக்கருக்கு 8,125 ரூபாய் மானியமாக வழங்கப்படுவது குறித்தும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்தும் பேசினார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை உதவி வேளாண்மை அலுவலர் சீனுவாசன் மானிய திட்டங்கள், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் உலர் களம் அமைத்தல் குறித்து பேசினார். முகாமில் கரும்பு கோட்ட களப்பணியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.