/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தொகுதியை (தனி) தக்க வைக்க வி.சி., பகீரத பிரயத்தனம்: கடுப்பில் தி.மு.க.,
/
விழுப்புரம் தொகுதியை (தனி) தக்க வைக்க வி.சி., பகீரத பிரயத்தனம்: கடுப்பில் தி.மு.க.,
விழுப்புரம் தொகுதியை (தனி) தக்க வைக்க வி.சி., பகீரத பிரயத்தனம்: கடுப்பில் தி.மு.க.,
விழுப்புரம் தொகுதியை (தனி) தக்க வைக்க வி.சி., பகீரத பிரயத்தனம்: கடுப்பில் தி.மு.க.,
ADDED : பிப் 06, 2024 06:13 AM
தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கியுள்ளனர். தி.மு.க., தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைப்பது குறித்து வியூகம் வகுத்து, தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி வருகின்றனர். இதற்கிடையே அந்தந்த கட்சிகள், தங்களின் தொகுதிகளை தக்க வைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விழுப்புரம் லோக்சபா தொகுதி தனி தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் வி.சி., போட்டியிட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், தி.மு.க., - காங்., - கம்யூ., என்ற பலமான கூட்டணியின் செல்வாக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பா.ம.க., வேட்பாளர் வடிவேல்ராவணன் தோல்வியடைந்தார்.
அ.தி.மு.க., - பா.ம.க., செல்வாக்குடன் உள்ள விழுப்புரம் கோட்டையில், வி.சி., முதன்முறையாக வெற்றி பெற்றதால், அந்த கட்சிக்கு கூடுதல் வலிமை கிடைத்தது. இதனால், இந்த லோக்சபா தேர்தலிலும் விழுப்புரம் தொகுதியை கட்டாயம் பெறுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இந்த முறை விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை குறிப்பிட்டு விருப்பம் தெரிவித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவனுக்கு, இந்த முறை அந்த தொகுதியை வழங்க தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு தி.மு.க., போட்டியிட வேண்டும் என தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர். இதனால், திருமாவளவன் விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால், கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ரவிக்குமார் எம்.பி., விழுப்புரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதோடு, மறைமுகமாக அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் தொகுதி வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்படும், அதில் தாராளமாக செலவு செய்யக்கூடிய நிலையில் உள்ள ரவிக்குமார் தான் போட்டியிடுவார், அதுவும் வி.சி., சின்னத்தில் நிற்பார் என அந்த கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே விழுப்புரம் தி.மு.க.,வினர் விழுப்புரம் தொகுதியை தொடர்ந்து கூட்டணிக்கு வழங்க கட்சி தலைமையிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிவாலயத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, விழுப்புரம் தி.மு.க.,வினர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட, தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், முக்கிய பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, வழக்கம்போல் கூட்டணிக்கு தாரை வார்த்து, தனது பாணி அரசியல் கணக்கை முடிப்பார் என உடன் பிறப்புகள் புலம்புகின்றனர்.

