/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் 42 கிராமங்களில் போலீஸ்... கண்காணிப்பு; இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
விக்கிரவாண்டியில் 42 கிராமங்களில் போலீஸ்... கண்காணிப்பு; இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
விக்கிரவாண்டியில் 42 கிராமங்களில் போலீஸ்... கண்காணிப்பு; இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
விக்கிரவாண்டியில் 42 கிராமங்களில் போலீஸ்... கண்காணிப்பு; இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : ஜூலை 04, 2024 12:41 AM
விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 42 கிராமங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. 276 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமையில் தேர்தல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி, பா.ம.க., கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுவதால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளும் தி.மு.க., தரப்பில் தற்போது 20 அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் பலர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல், பா.ம.க., தரப்பில் ராமதாஸ், அன்புமணி, மணி, சிவக்குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நிர்வாகிகள் என திரளாக வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணை, கோலியனுார், விக்கிரவாண்டி ஒன்றியங்கள் வாரியாக, கிராமங்கள் வாரியாக பிரித்துக்கொண்டு, காலை முதல் இரவு வரை தீவிர பிரசாரமும், தாராளமாக செலவு செய்தும், திண்ணை பிரசாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்குவதால், இரு தரப்பினருக்கும் இடையே, பிரசாரம் மேற்கொள்வதில், கிராமப்புறங்களில் கடந்த 4 நாள்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கையாக முதல்கட்டமாக 200 பட்டாலியன் போலீசார் நேற்று குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஆசாரங்குப்பத்தில் தி.மு.க., தரப்பில், வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொடுக்க முயன்றதை பா.ம.க.,வினர் தடுத்த சம்பவமும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், பதற்றமான கிராமங்களைக் கண்டறிந்து போலீசார் கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 40 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதே போல், 42 கிராமங்கள் மோதல், பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, காணை, ஆசாரங்குப்பம், கெடார், தொரவி, பனையபுரம் உள்ளிட்ட 42 பதற்றமான கிராமங்களில், தலா 8 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தி, 24 மணி நேரமும் கண்காணிக்கவும், மோதல் பதற்றத்தைத் தணிக்க சுழற்சி முறையில் பணியாற்றவும், எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவிட்டு, பிக்கெட்டிங் பணியை தொடங்கியுள்ளனர்.