/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
/
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூன் 16, 2025 11:58 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அயனம்பாளையம், கொய்யாத்தோப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அருகே உள்ள கிராமத்திலும், வயல் வெளிகளில் உள்ள மோட்டார் பம்புகள் மூலம் குடிநீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் கொய்யாத்தோப்பு சந்திப்பில் காலி குடங்களுடன், பேரிகார்டுகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் மோட்டார் பழுது காரணம் என கூறினர்.
விசாரித்தால், நீர் ஏற்றும் ஆப்பரேட்டருக்கு ஊராட்சி நிர்வாகம் பல மாதங்களாக சம்பளம் கொடுக்காததால், அவர், குடிநீர் தொட்டிக்கு தினசரி குடிநீர் ஏற்றாமல் இருந்துள்ளார் என தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவித்து, நாளை (இன்று) முதல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதன் பேரில், 8:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.