/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம்
ADDED : டிச 05, 2024 06:59 AM

திருவெண்ணெய்நல்லுார்; விழுப்புரம் மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்காததால் ஆவேசமடைந்தனர். அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறு பகுதியில் மழை வெள்ளத்தால் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கின. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லாமலும், உணவு, பால் போன்றவை கிடைக்காமல் அவதியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஏமப்பூர், ஜீவா நகர் மக்கள் நேற்று காலை 8:15 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் - திருக்கோவிலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த தி.மு.க., பேனரை கிழித்து வீசினர்.
மதியம் 12:00 மணியளவில் கலெக்டர் பழனி பேச்சுவார்த்தை நடத்தினார். பின், ஏமப்பூர், முத்தையா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.
கலெக்டர் பழனி கூறுகையில் பாதிப்பு குறித்து ஆர்.டி.ஓ., மூலமாக கணக்கெடுத்து, நிவாரணம் வழங்கப்படும், வீடு சேதமடைந்தவர்களுக்கு வீடு வழங்கப்படும், உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மின் துண்டிப்பு போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும். பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அரகண்டநல்லூர்
அரகண்டநல்லூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், மின் வசதி இல்லை, அடிப்படை உதவிகள் எதையும் அரசு வழங்கவில்லை என கூறி திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் சாகுல் அமீத், தாசில்தார் கிருஷ்ணராஜ், பேரூராட்சி தலைவர் அன்பு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கணக்கெடுப்பு பணியை உடனடியாக துவக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் காலை 9:00 மணியிலிருந்து 10:00 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே தி.மேட்டுப்பாளையம், முத்தியால்பேட்டை பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை 7.15 மணிக்கு, விழுப்புரம் - செஞ்சி சாலையில் மறியல் செய்தனர். அங்கு வந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., சிவாவை சூழ்ந்து கொண்டு, 'மழைநீர் சூழ்ந்த பகுதிகளை அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை. உணவுகூட வழங்கவில்லை' என குற்றம் சாட்டினர். எம்.எல்.ஏ., சிவா, இந்த பகுதிகளில் உள்ள குறைகளை தீர்க்கவும், புயல் பாதித்த பகுதிக்கு அரசு நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியததால், 8.15 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
முத்தாம்பாளையம் கிராமத்தில் மழைநீர் வடியாததாலும், மின்சாரம் வராததாலும், நேற்று காலை 10.15 மணிக்கு விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் கனிமொழி, ஏ.டி.எஸ்.பி., திருமால் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 11.15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.
விக்கிரவாண்டி
ஒரத்துாரில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் இன்றி அவதிப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை 10.00 மணியளவில் ஒரத்துாரில், லட்சுமிபுரம் - முண்டியம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், தாசில்தார் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்க வந்ததால், 10.30 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
விக்கிரவாண்டி இரட்டை கிணறு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண பொருட்கள் வழங்க கோரியும், மழைநீர் வடிகால் வசதி செய்து தரக்கோரியும் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு குத்தாம்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், தாசில்தார் யுவராஜ், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதையடுத்து மாலை 4.00 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
கண்டமங்கலம்
மழைவெள்ளத்தால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, சொர்ணாவூர் ஆகிய கிராமங்களில் நுாற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் விளை நிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்து பார்வையிடாததை கண்டித்து, கிராம மக்கள் கடலுார் சாலையில் நேற்று காலை 8:00 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 11:15 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால், விழுப்புரம்-கடலுார் மற்றும் பண்ருட்டி மார்க்கத்தில் 3:00 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.