/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகராட்சி நிர்வாகம்... திணறல்; பாதாள சாக்கடை பிரச்னை தீருமா?
/
விழுப்புரம் நகராட்சி நிர்வாகம்... திணறல்; பாதாள சாக்கடை பிரச்னை தீருமா?
விழுப்புரம் நகராட்சி நிர்வாகம்... திணறல்; பாதாள சாக்கடை பிரச்னை தீருமா?
விழுப்புரம் நகராட்சி நிர்வாகம்... திணறல்; பாதாள சாக்கடை பிரச்னை தீருமா?
ADDED : செப் 18, 2024 04:45 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பகுதியில் நாள்தோறும் பாதாள சாக்கடை பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
விழுப்புரம் நகராட்சியில், பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், முழுமையடையவில்லை. பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. மழைக் காலங்களில் பள்ளம் தோண்டப்பட்ட தெருக்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், தி.மு.க., அலுவலகம் எதிரில் பாதாள சாக்கடை தொட்டி நிரம்பி, தொடர்ந்த கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதேபோல், நகரின் பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேறுவது பற்றி நகராட்சி நிர்வாகத்தில், 'ஏற்கனவே பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை. இதனால், சமாளிக்க முடியாத அளவில், நகரின் பல இடங்களிலும், பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதாக புலம்பினர்.
விழுப்புரம் நகராட்சியில் தற்போது உள்ள பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் இயந்திரத்தின் மூலம், ஓரளவு துார் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இதைவிட அதிநவீன இயந்திரத்தை வரவழைத்து பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தினால் தான், எதிர்வரும் மழைக்காலத்தில் கழிவுநீர் தேங்கும் பிரச்னையை தவிர்க்க முடியும்.
இப்பிரச்னை குறித்து, நகராட்சி சுகாதார நல அலுவலர் பிரியாவிடம் (கமிஷ்னர் பொறுப்பு) கேட்டபோது, 'விழுப்புரம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இவற்றை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக விரைவில் பாதாள சாக்கடை அடைப்புகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ' என தெரிவித்தார்.
கடந்த மே மாதம், நகராட்சி பொறியாளர் இடமாறுதலில் சென்றார். கடந்த 5 மாதமாக அந்த பணி நிரப்பப்படவில்லை. எனவே நகராட்சி உதவி பொறியாளர் வள்ளி, நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் மற்றும் குடிநீர் விநியோக பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
விழுப்புரம் வடக்குத் தெரு பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், பாதியளவு மீண்டும் அதே தொட்டியில் திரும்ப வரும் பிரச்னை பற்றி உதவி பொறியாளர் வள்ளியிடம் கேட்டபோது,'அந்த பிரச்னை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதே போல், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வீரவாழியம்மன் கோவில் செல்லும் வழியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு சேதமடைந்த குழாயை அகற்றிவிட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடும் பிரச்னைகள் உள்ளது. இவற்றை சீரமைப்பது குறித்து, நகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமென தெரிவித்தார்.
இத்துடன், நகராட்சியில் பல இடங்களிலும் பாதாள சாக்கடைப் பணிகள் முழுமையடையவில்லை. அப்பகுதி தெருக்களில் புதிய சாலை அமைக்கும் பணி இழுபறியாக உள்ளது. இந்த ஒப்பந்த பணிகள் நிர்ணயித்த காலக்கெடு முடிவடையும் நிலை உள்ளதால், ஒப்பந்ததாரர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.