/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வதேச தடகள போட்டியில் விழுப்புரம் மாணவிக்கு தங்கம்
/
சர்வதேச தடகள போட்டியில் விழுப்புரம் மாணவிக்கு தங்கம்
சர்வதேச தடகள போட்டியில் விழுப்புரம் மாணவிக்கு தங்கம்
சர்வதேச தடகள போட்டியில் விழுப்புரம் மாணவிக்கு தங்கம்
ADDED : டிச 12, 2024 08:08 AM

விழுப்புரம் : விழுப்புரத்தை சேர்ந்த நகராட்சி பள்ளி மாணவி சுபஸ்ரீ, சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பூங்கொடி. இவர்கள், மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் சுபஸ்ரீ, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான சுபஸ்ரீ, எட்டு வயது முதல் 17 வயது வரை தொடர்ந்து ஓட்டப்பந்தயத்திற்கு பயிற்சி பெற்று வந்தார்.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில், கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 10வது சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் தடகள போட்டியில் சுபஸ்ரீ பங்கேற்றார்.
இதில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்று ஊர் திரும்பிய மாணவிக்கு, அவர் பயிலும் பள்ளியில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அலங்கார வாகனத்தில் மாணவி சுபஸ்ரீயை அமர வைத்து, தலைமை ஆசிரியர் ரகு தலைமையில் ஊர்வலமாக , பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
முன்னதாக கொட்டும் மழையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக நடனமாடி, மாணவியை மலர் துாவி வரவேற்றனர்.
மாணவி சுபஸ்ரீ ஏற்கனவே, மத்திய பிரதேசம் இந்துாரில் நடந்த தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ,200 மீட்டர் 400 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினார்.
மாணவிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றிய வேல்முருகன், ராஜேஷ், சோபியா, தமிழரசு ஆகியோர் பயிற்சி அளித்து வந்தனர்.