/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தாலுகாவில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு: திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
/
விழுப்புரம் தாலுகாவில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு: திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
விழுப்புரம் தாலுகாவில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு: திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
விழுப்புரம் தாலுகாவில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு: திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : செப் 19, 2024 11:17 PM

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், பல்வேறு கிராமங்களில் கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
விழுப்புரம் தாலுகாவில், அரசு சார்பில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், அதிகாரிகள் கூட்டாய்வு நிகழ்ச்சி நேற்று காலை 9:00 மணிக்கு தொடங்கி மாலை 4:00 மணி வரை நடந்தது.
விழுப்பரம் அடுத்த மோட்சகுளம், சிறுவந்தாடு, மிட்டாமண்டகப்பட்டு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் ஊராட்சியில் துாய்மையே சேவை இயக்கத்தின் கீழ் 150 தென்னங்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். அதன்படி, மாவட்டத்தில் கடந்த 17 முதல் வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சிறுவந்தாடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் துாய்மையை கடைபிடிப்பது தொடர்பான உறுதிமொழியை பள்ளி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கி பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை தவிர்த்திட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது பேசிய கலெக்டர், மாணவர்கள் படிக்கும் காலகட்டத்திலேயே தங்கள் வீடுகள், பள்ளிகளை துாய்மையாக வைத்திருப்பதற்கான நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வீடு மற்றும் பள்ளியை துாய்மையாக வைத்திருப்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
அதேபோல், மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் துாய்மையின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து துாய்மைப் பணியாளர்களிடம் வழங்கி வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மிட்டாமண்டகப்பட்டு ஊராட்சியில், பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 22 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.
அதே பகுதியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகள் கான்கிரீட் வீடுகள் கட்டி வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, பி.டி.ஓ.,கள் மணிவண்ணன், சிவக்குமார், ராஜவேல், வெங்கடசுப்ரமணியன், தாசில்தார் கனிமொழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதே போல், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அதிகாரிகள், வெவ்வேறு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.