/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து வாகனங்கள் விதிமீறல்! வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
/
போக்குவரத்து வாகனங்கள் விதிமீறல்! வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
போக்குவரத்து வாகனங்கள் விதிமீறல்! வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
போக்குவரத்து வாகனங்கள் விதிமீறல்! வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
ADDED : ஆக 06, 2024 06:54 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து விதிமுறை மீறி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
விழுப்புரம் நகரில் தினந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.
இதனால் ஒழுங்காக போக்குவரத்து விதிமுறையை கடைபிடித்து செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகரில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி கொண்டு மூன்று சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. கிராமங்களில் லோடு வாகனமாக செல்லும் மினி சரக்கு வேனில் திருவிழா, இறுதி சடங்கிற்கு 20 முதல் 30 பேரை அடைத்து கொண்டு ஏற்றி செல்கின்றனர்.
நகர பகுதிகள் வழியாக செல்லும் இது போன்ற வாகனங்களை டிராபிக் போலீசார் மட்டுமின்றி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
இது மட்டுமின்றி, தனியார் பஸ்களில் விதிமுறை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தி கொண்டு டிரைவர்கள் அதிவேகமாக பஸ்களை ஓட்டிச் செல்கின்றனர். விதிமுறை மீறி பொருத்திய ஏர் ஹாரன்களை அகற்ற வேண்டும் என்றும், அகற்றாத பஸ்களில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்வதோடு, தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கக் கோரி, போக்குவரத்து அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வந்த போது மட்டும், விழுப்புரம் நகரில் உள்ள தனியார் பஸ்களை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அதன் பிறகு கண்டுகொள்வதில்லை.
இதனால், விழுப்புரம் நகருக்குள் செல்லும் கடலுார், புதுச்சேரி மார்க்க தனியார் பஸ்களில் விதிமுறை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை அடித்தபடி டிரைவர்கள் செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் மக்களுக்கு செவித்திறன் பாதிப்பதோடு, வாகன ஓட்டிகள் பலரும் அவசரத்தில் ஒதுங்குவதால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், சாகச பயணம் பெயரில், ஓவர் லோடுகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு பயணிப்போரும், ஒரு டூ வீலர் மீது மற்றொரு டூ-வீலரை கால் வைத்து தள்ளி கொண்டு செல்வோரும் அதிகரித்துள்ளனர்.
இது போல், விழுப்புரம் நகரில் போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்காமல் செல்வோர் அதிகரித்துள்ளதால் சாலையில் ஒழுங்காக பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். இதற்கு அதிகாரிகள், ஒரு மாதத்திற்கு இரு முறை கண்காணிப்பு பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.