/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கவலை: விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
/
தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கவலை: விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கவலை: விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கவலை: விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
ADDED : பிப் 22, 2024 11:53 PM

திண்டிவனம்: திண்டிவனம், மரக்காணம் பகுதியில் தர்பூசணி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக விலை விழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டக் கூடியது. அதன் மொத்த எடையில் 92 சதவீதம் தண்ணீர், 6 சதவீதம் சர்க்கரை சத்து என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் உகந்த பழ வகை.
மேலும், விட்டமின் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ள தர்பூசணி நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், தர்பூசணி பழத்தை தாராளமாக சாப்பிடுவதற்கு உகந்ததாக உள்ளது.
இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தர்பூசணி சீசன் பிப்ரவரி, முதல் வாரத்திலிருந்து துவங்கி விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம், மரக்காணம் தாலுகா பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யபட்டுள்ளது.
முருக்கேரி, நொளம்பூர், சலவாதி, ஊரல், பட்டணம், வெள்ளிமேடுபேட்டை, நகர், சிறுவாடி, ஓமிப்பேர், தீவனுார் உள்ளிட்ட பல கிராமங்களில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளது.
தர்பூசணி சாகுபடி 60 நாள் என்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில் பயிரிடப்பட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் அறுவடை துவங்கி விட்டது. தர்பூசணி பயிரிடப்பட்ட நேரத்தில், கடந்த டிசம்பர் 7 மற்றும் 8ம் தேதி ஏற்பட்ட புயல், மழையால் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள தர்பூசணி விளைச்சல் அதிக அளவில் சேதமானது.
பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு டன் தர்பூசணி 18 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது டன் ஒன்று 12 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் தர்பூசணி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது பல இடங்களில் தர்பூசணி அதிக அளவில் அறுவடை நடப்பதால் விலையில் வீழ்ச்சியடைந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம், மரக்காணம் தாலுகாவில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி கத்தார், வளைகுடா நாடுகளுக்கு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, மகாரஷ்டிரா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தாமதமாக அறுவடை செய்யப்படும் தர்பூசணி, தற்போது மார்க்கெட்டிற்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.
அறுவடை அதிகரிப்பால் ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய் வரை தர்பூசணி விற்கப்படுகிறது. தொடர்ந்து அறுவடை அதிகரிக்கும் நேரத்தில் தர்பூசணி விலை இன்னும் வீழ்ச்சியடையும் என்பதால், தர்பூசணி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.