/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செயல்படாத தி.மு.க., நிர்வாகிகள் களையெடுப்பு?
/
செயல்படாத தி.மு.க., நிர்வாகிகள் களையெடுப்பு?
ADDED : நவ 18, 2025 07:09 AM

வி ழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாததால், மண்டல பொறுப்பாளராக கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்.
இவர், ஆரம்பத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில், 'கட்சியில் செயல்படாத நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும், வகையில், செயல்படாதவர்கள் யார் என்று தெரிந்தால், கட்சி தலைமையிடம் கூறி அவர்களை நீக்கிவிட்டு, செயல்படும் நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார். ஆனால் கூறிய படி அவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதேபோல் சமீபத்தில் செஞ்சியில் நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திலும், செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, செயல்படும் நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன் என மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் பலர் பெயருக்கு நிர்வாகியாக இருப்பது பற்றி அமைச்சர் பன்னீர்செல்வம் கணக்கெடுப்பு நடத்திவிட்டார்.
இதன்படி செயல்படாத நிர்வாகிகளை களையெடுத்துவிட்டு, இளைஞர்கள் மற்றும் செயல்படும் நிர்வாகிகளை புதியதாக நியமிக்க நடவடிக்கை எடுங்கள் என மாவட்ட செயலாளர் மஸ்தானிடம் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாக, நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களைப் பிரித்து கூடுதலாக செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் ஒன்றியங்களை பிரித்து புதியதாக கூடுதல் நிர்வாகிகள் நியமனத்தையும் மாவட்ட செயலாளர் கிடப்பில் போட்டுள்ளதாக, கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், வயதான நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகளை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால், வடக்கு மாவட்டத்திலுள்ள திண்டிவனம், செஞ்சி, மயிலம் ஆகிய 3 சட்டசபை தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளர் கரையேறுவது சிரமம்தான் என உடன்பிறப்புக்களுக்குள் பேசி வருகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய மாவட்ட செயலாளர் மஸ்தான், மண்டல பொறுப்பாளர் மற்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் மவுனம் காத்து வருவது, நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

