/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் கட்டப்படும் தலைமை மருத்துவமனை திறப்பு விழா எப்போது?
/
திண்டிவனத்தில் கட்டப்படும் தலைமை மருத்துவமனை திறப்பு விழா எப்போது?
திண்டிவனத்தில் கட்டப்படும் தலைமை மருத்துவமனை திறப்பு விழா எப்போது?
திண்டிவனத்தில் கட்டப்படும் தலைமை மருத்துவமனை திறப்பு விழா எப்போது?
ADDED : ஜன 17, 2025 06:44 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை காலக்கெடுவை தாண்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், திறப்பு விழா எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குறுகிய இடத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்தது.
தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 23 ம் ஆண்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் மற்றும் கூடுதலாக 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்படும்.
தமிழக அரசு, திண்டிவனம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை உயர்த்தும் வகையில் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடுசெய்தது.
இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை மூலம் கடந்த 23ம் ஆண்டு ஜூலை மாதம், மருத்துவ கட்டடங்கள் கட்டும் பணி துவங்கியது.
கட்டடம் கட்டும் பணியை 18 மாதங்களுக்குள் முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது. வளாகத்தில் புதியதாக இரண்டு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
முதலாவது பிளாக் தரைத்தளம் மற்றும் 5 மாடி கட்டடங்கள் மகப்பேறு மருத்துவமனைக்காக கட்டப்பட்டுள்ளது. இதில் பிரவச வார்டுகள் மற்றும் 1 வயதிலிருந்து 5 வயது வரையிலான குழந்தைகள் சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகில் இரண்டாவது பிளாக் 5 மாடி கட்டடங்களாக அமைக்கப்படுகின்றது. இதில் அவரச சிகிச்சை பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, டயலிசிஸ் பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, டி.சி.ஸ்கேன், ட்ரூமோ வார்டு அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு ஆர்த்தோ சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு தனித்தனி சிகிச்சைக்காக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது இல்லாமல் வளாகத்தில் குளிர்சாதன வசதி கொண்டு நவீன மார்ச்சுவரி, போலீஸ் புறக்காவல் நிலையம், சமையலறை, மருத்துவ கண்காணிப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் தொடர்பான கட்டடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
எலக்ட்ரிக் பணிகள், பிரசவ வார்டில் மேல்தளப்பணிகள், லிப்ட அமைக்கும் பணி உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது.
டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் முன்பே தெரிவித்திருந்தும், தற்போது வரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றது.
தற்போது கட்டடத்தின் உள்பகுதியில் வேலைகள் நடைபெறுகின்றது. டைல்ஸ் ஒட்டும் பணி, எலக்ட்ரிக் பணிகள், பெயிண்டிங் வேலைகள், வெளிப்புற பூசு வேலைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறவில்லை.
இதனால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு விழா எப்போது நடைபெறும் என்று கேள்விக்குறியாக உள்ளது.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது,'' தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர்.
சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக திண்டிவனம் உள்ளதால் அரசு மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியவர்கள் வந்தால்,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவனைக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கின்றனர். இதனால் வழியிலேயே பலர் உயிரிழக்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துமனையை விரைவில் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகஉள்ளது.