/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிளை சிறைச் சாலையை மாற்றுவது எப்போது: முதல்வர் திறந்து வைத்தும் மெத்தனம்
/
கிளை சிறைச் சாலையை மாற்றுவது எப்போது: முதல்வர் திறந்து வைத்தும் மெத்தனம்
கிளை சிறைச் சாலையை மாற்றுவது எப்போது: முதல்வர் திறந்து வைத்தும் மெத்தனம்
கிளை சிறைச் சாலையை மாற்றுவது எப்போது: முதல்வர் திறந்து வைத்தும் மெத்தனம்
ADDED : ஆக 19, 2024 12:12 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட புதிய கிளைச்சிறைச்சாலை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிளை சிறைச்சாலை குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 29 விசாரணை கைதிகள் மட்டும் தங்க வைக்க முடியும்.
கடந்த ஆட்சியில், 2017ம் ஆண்டு, திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் உள்ள ஜக்காம்பேட்டையில் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு பக்கத்திலேயே இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீடு வசதி கழகத்தின் சார்பில், 8 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில், புதியதாக கிளை சிறைச்சாலை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
அதன்பிறகு புதிய கிளை சிறைச்சாலை கட்டடம் சிறைத்துறை வசம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ஓப்படைக்கப்பட்டும், திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை 19ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மூலம் புதிய கிளை சிறைச்சாலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில், புதிய கிளை சிறையை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் நீண்ட நாள் மூடிக்கிடந்ததால், கட்டடத்தின் உள்ளே உள்ள மின்சார ஒயர்களை எலி கடித்து சேதமாகியுள்ளது. இதனால் உடனடியாக திண்டிவனம் பழைய கிளை சிறையில் உள்ள கைதிகளை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
திறப்பு விழா நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இதுவரை திண்டிவனம் கிளை சிறை குறுகிய இடத்திலேயே செயல்பட்டு வருகிறது.
சிறையை புதிய இடத்திற்கு மாற்றுவதில் ஏற்படும் தாமதம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'பழைய இடத்தில் உள்ள சிறையில் 29 விசாரணை கைதிகள் தங்க வைக்க முடியும். புதியதாக திறக்கப்பட்ட சிறையில் 100க்கு மேற்பட்ட விசாரணை கைதிகளை அடைக்க முடியும்.
சிறைத்துறை அதிகாரிகள், பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு விசாரணை கைதிகளை மாற்றுவதற்கு தனியாக சம்பந்தபட்ட கிளை சிறைக்கு உத்தரவு வழங்க வேண்டும்.
தற்போது பழைய கிளை சிறையில் 10க்கும் குறைவாக பணியாளர்கள் உள்ளனர். புதிய கிளை சிறைக்கு கூடுதலாக வார்டன்கள் உள்ளிட்ட 10 பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த பிரச்னையால் திண்டிவனம் கிளை சிறையில் உள்ள விசாரணை கைதிகளை புதிய இடத்திற்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.
வீணாக மூடிக்கிடக்கும் புதிய கிளை சிறையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

