/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிப்பது எப்போது?...: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
/
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிப்பது எப்போது?...: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிப்பது எப்போது?...: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிப்பது எப்போது?...: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2025 05:00 AM

செஞ்சி, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ள செஞ்சி கோட்டையை மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், புதிய திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள கோட்டைகளில் தரைக்கோட்டை மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டைகளில் முழு அமைப்புடன் உள்ள கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது. மூன்று மலைகளை 12 கி.மீ., நீளத்திற்கான மதில் சுவர்களால் இணைத்து 1200 ஏக்கர் பரப்பளவில் கட்டி உள்ளனர்.
புராதன நகரம்
தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பழமையான கட்டடக்கலை, கலாச்சார சின்னங்களை கொண்ட புராதன நகரங்களின் பட்டியலில் செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த கோட்டையை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அகில இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடும் இடங்களின் பட்டியலில் செஞ்சி கோட்டை 5 வது இடத்தில் உள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை செஞ்சி கோட்டையை பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னமாக பாதுகாத்து பராமரித்து வருகிறது.
இத்துறையினர் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மட்டுமே நிதி ஒதுக்கி செலவு செய்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவருவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில்லை.
கடந்த ஆண்டு மத்திய அரசு செஞ்சி கோட்டை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகளை சத்ரபதி சிவாஜியின் ராணுவ கேந்திரங்கள் என்ற அடிப்படையில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோவிற்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து யுனெஸ்கோ நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் 12 கோட்டைகளையும் கடந்த 11ம் தேதி உலக பாரம்பரிய சின்னமாக யுனொஸ்கோ அறிவித்தது.
சர்வதேச சுற்றுலா தலம்
யுனொஸ்கோவின் அறிவிப்பை தொடர்ந்து, உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் செஞ்சிகோட்டை இடம் பெற்று விட்டதால் இனி இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானவர்கள் செஞ்சி கோட்டைக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே செஞ்சி கோட்டை சர்வதேச சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செஞ்சிகோட்டை வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் இதுவரை சுற்றுலா தலமாக அறவிக்க வில்லை.
இதனால் செஞ்சியில் சுற்றுலா அலுவலகம், ஓட்டல், சுற்றுலா திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்த வில்லை. மத்திய, மாநில அரசுகளின் சுற்றுலா புத்தகங்களிலும் செஞ்சி கோட்டை இடம் பெற வில்லை. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதியில் இதுவரை செஞ்சியில் ஒரு நிழற் குடை கூட கட்ட வில்லை.
அடிப்படை வசதிகள் தேவை
செஞ்சி கோட்டையில் இதுவரை போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விதி முறைக்காக மிக குறைந்த அளவில் வசதியை இந்திய தொல்லியல் துறை செய்துள்ளது. ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டை உச்சிவரை சுற்றுலா பயணிகள் சென்று வந்தாலும் தரைப்பகுதியில் மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையில் குடிநீர் வசதி செய்துள்ளனர்.
கழிவறை வசதி கோட்டைக்கு வெளியே ஒரே இடத்தில் மட்டும் உள்ளது. கோட்டைக்கு வெளியில் டிக்கட் கவுண்டர் பகுதியிலும், வெங்கட்ரமணர் கோவில், சிவன் கோவில் பகுதியிலும் குடிநீர் வசதி இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட போலீஸ் அவுட் போஸ்ட்டிற்கு போலீசாரை நியமிக்காமல் மூடி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
படகு சவாரி
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தமிழக அரசு செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து சுற்றுலாத்துறை அலுவலகம் திறக்கவும், ச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள செட்டி குளம், சர்க்கரை குளம், பி.ஏரியில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் சுற்றுலாவை மேம்படுத்த செஞ்சி கோட்டையில் ஒலி, ஒளி காட்சி, பேட்டரி கார் வசதியும், புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டும்.
அருங்காட்சியகம்
செஞ்சி கோட்டை மற்றும் செஞ்சி சுற்றி உள்ள கிராமங்களில் கண்டறிந்துள்ள சிற்பங்கள், சிலைகளை ராஜகிரி கோட்டையின் தரைத்தளத்தில் திறந்த வெளியில் காட்சிக்கு வைத்துள்ளனர். இதை கோட்டைக்குள் உள்ளே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
எனவே தமிழக அரசும், மத்திய அரசும் செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து கூடுதல் வசதிகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.