/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு... எப்போது?; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
/
மாவட்டத்தில் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு... எப்போது?; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
மாவட்டத்தில் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு... எப்போது?; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
மாவட்டத்தில் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு... எப்போது?; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ADDED : ஆக 10, 2025 11:51 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தமிழக அரசு உரிய முறையில் தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஜன., மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட மக்கள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கைகள், முக்கிய பிரச்னைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவற்றை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட, முதல்வர் அறிவுரை வழங்கினார்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக, உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.
பொறுப்பினை ஏற்றதும், மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கும் பணியையும், மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள நீண்டகால பிரச்னைகளை தீர்க்க, அரசு முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
முக்கிய கோரிக்கைகள் விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 'ரிங் ரோடு' திட்டம்; விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், நவீன கலையரங்கம்; விழுப்புரம்- புதுச்சேரி இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு மாநில அரசு இடம் ஒதுக்கீடு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.
விழுப்புரம் பழைய நகராட்சி அலுவகத்தில் டவுன் ஹால் அமைப்பதற்கான பணியை விரைந்து துவக்கி, திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திண்டிவனம்- வானுார் இடையே உள்ள எறையானுார் கிராமத்தில், அரசு வேளாண் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செஞ்சி கோட்டையில் கூடுதல் வசதி விக்கிரவாண்டி பகுதியில், அரசு தொழிற்பயிற்சி மையம், சிப்காட் தொழிற்சாலை; விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சர்வீஸ் சாலை; முண்டியம்பாக்கம் - ஒரத்துார் இடையே ரயில்வே மேம்பாலம்; ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
செஞ்சி அருகில் உள்ள பாக்கம் - கெங்கவரம் பகுதியில் வன விலங்கு சரணாலயம் அமைப்பது குறித்து தெளிவான அறிவிப்பு மற்றும் திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை புதிய ரயில்வே திட்டத்தை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
செஞ்சிக் கோட்டையை முக்கிய சுற்றுலா மையமாக அறிவித்து, கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும். மரக்காணம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையம் (ஐ.டி.ஐ.). மீனவ மக்கள் பயனடைய மரக்காணம் பேரூராட்சி அழகன்குப்பம் முதல், புத்துப்பட்டு ஊராட்சி முதலியார்குப்பம் வரை கடற்கரையில், துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.
ஆன்மீக சுற்றுலா தலமாக அங்காளம்மன் கோவில் வானுார் ஒன்றிய பகுதியை இரண்டாக பிரித்து, கிளியனுார் ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவித்து, பக்தர்களுக்கு கூடுதலான வசதிகளை செய்து தர வேண்டும். மேல்மலையனுாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க வேண்டும்.கண்டாச்சிபுரம், மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் சவுக்கு அதிகளவில் பயிரிடப்படுவதால், காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்திற்கு தாமதமின்றி நிதியை ஒதுக்கி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் நிலுவையில் உள்ளன.
இந்த கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டால், பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என, ஆளுங்கட்சி தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் உள்ளன. தமிழக அரசு இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.