/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கமிட்டியில் பாதுகாப்பு கூடம் அமைப்பது எப்போது: அறிவித்து 7 மாதமாகியும் பணிகள் துவங்காத அவலம்
/
செஞ்சி கமிட்டியில் பாதுகாப்பு கூடம் அமைப்பது எப்போது: அறிவித்து 7 மாதமாகியும் பணிகள் துவங்காத அவலம்
செஞ்சி கமிட்டியில் பாதுகாப்பு கூடம் அமைப்பது எப்போது: அறிவித்து 7 மாதமாகியும் பணிகள் துவங்காத அவலம்
செஞ்சி கமிட்டியில் பாதுகாப்பு கூடம் அமைப்பது எப்போது: அறிவித்து 7 மாதமாகியும் பணிகள் துவங்காத அவலம்
ADDED : ஜன 20, 2025 06:48 AM
செஞ்சி: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மழையின் போது நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க ரூ. 2 கோடி மதிப்பில் பாதுகாப்பு கூடம் அமைக்கப்படும் என வேளாண் அமைச்சர் அறிவித்து 7 மாதங்களாகியும் இதுவரை பணிகள் துவங்காததால், நெல் மூட்டைகளை திறந்த வெளி களத்தில் வைப்பது தொடர்கிறது.
செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1978 ம் ஆண்டு 4.68 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போதே செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல் வியாபாரிகள் நெல் வாங்க வந்தனர். இதனால் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைத்தது.
கூடுதல் விலை கிடைத்ததால் தென்னாற்காடு மாவட்டம் மட்டுமின்றி வடாற்காடு மாவட்டத்தில் இருந்தும் அப்போதே விவசாயிகள் நெல் கொண்டு வந்தனர். இதனால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் தமிழகத்தில் நெல் வரத்தில் முதலிடம் பிடித்தது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது.
இவ்வளவு பெருமைக்குரிய செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு போதிய இடம் இல்லை. குறைந்த பட்சம் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேவை உள்ளது. இருக்கும் குறைந்த இடத்திலும் ஏலம் நடத்த போதிய மேற்கூரை உள்ள களங்கள் இல்லை.
இதனால் மழையின் போது ஒவ்வொரு முறையும் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த ஜூன் 22ம் தேதி வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் செஞ்சி, போளூர், விருத்தாச்சலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஒழுங்குமுறை கூடங்களில் தலா ரூ. 2 கோடி மதிப்பில் 15 ஆயிரம் சதுரடியில் பாதுகாப்பு கூடங்கள் கட்டப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி 7 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் இதுவரையில் இதற்கான பணிகள் துவங்க வில்லை. இப்போது பணிகளை துவங்கினாலும் முடிவடைய குறைந்த பட்சம் 5 மாதங்களாகும்.
அதுவரை வழக்கம் போல் நெல் மூட்டைகள் மழையில் நனையும். கன மழை பொழிந்தால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு கூடத்தை விரைவாக கட்டுவதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.