/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக பட்ஜெட்டில் நந்தன் கால்வாய் குறித்த அறிவிப்பு... வெளியாகுமா? சாத்தனூர் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தமிழக பட்ஜெட்டில் நந்தன் கால்வாய் குறித்த அறிவிப்பு... வெளியாகுமா? சாத்தனூர் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
தமிழக பட்ஜெட்டில் நந்தன் கால்வாய் குறித்த அறிவிப்பு... வெளியாகுமா? சாத்தனூர் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
தமிழக பட்ஜெட்டில் நந்தன் கால்வாய் குறித்த அறிவிப்பு... வெளியாகுமா? சாத்தனூர் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 17, 2024 05:19 AM
செஞ்சி : தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நந்தன் கால்வாய் - சாத்தனுார் அணை இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகுமா என விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் வட பகுதியான செஞ்சி, மேல்மலையனுார் பகுதி இம்மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது. ஆனால், இப்பகுதியில் குறிப்பிடும் படியான நீர் ஆதாரம் இல்லை. ஏரி, கிணற்று பாசனத்தின் மூலமே பெரும் பகுதி விவசாயம் நடந்து வருகிறது.
இப்பகுதி ஏரிகளுக்கு நீர் வரத்திற்கும், கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக செஞ்சி அடுத்த பாக்கம் மலைக் காடுகளில் உற்பத்தியாகும் வராக நதி மட்டுமே உள்ளது. மழை குறையும் ஆண்டுகளில் வராகநதியில் தண்ணீர் வறண்டால் அந்த ஆண்டுகளில் விவசாயம் கடும் பாதிப்புக்குள்ளாகும்.
இதற்கு தீர்வாக கடந்த 1971ம் ஆண்டு நந்தன் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துறிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனுாரில் அணை கட்டி அதில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
மொத்தம் 38 கி.மீ., துாரம் உள்ள இந்த கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகளுக்கும் பனமலை ஏரி நிரம்பிய பிறகு அதில் இருந்து மேலும் 12 ஏரிகளுக்கும் என 36 ஏரிகள் பயனடைய வேண்டும்.
ஆனால் 50 ஆண்டுகளாக இத்திட்டத்தில் பாதி துாரம் கூட தண்ணீர் கொண்டு வரமுடியாத நிலையே நீடித்தது.
ஒவ்வொரு முறையும் அரசு தரப்பில் நிதி ஒதுக்கி மேற்கொண்ட பணிகள் அறைகுறையாகவே முடிந்தது. 2021ம் ஆண்டு விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் இணைந்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தை துவங்கினர்.
இவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து நந்தன் கால்வாயில் துார்வாரி சரி செய்தனர். இதனால் திட்டம் துவங்கி 51 ஆண்டுகள் கழித்து முதன் முறையாக 2022ம் ஆண்டு பனமலை ஏரிக்கு தண்ணீர் வந்தது. அதுவரை நந்தன் கால்வாய் திட்டம் தோல்வியடைந்த திட்டமாகவே பொதுப்பணித்துறை கருதி வந்தது. முதன் முறையாக தண்ணீர் வந்த பிறகே நந்தன் கால்வாய் வெற்றி கரமான திட்டம் என்ற நம்பிக்கை அரசு தரப்பில் ஏற்பட்டது.
இதையடுத்து துறிஞ்சல் ஆறு துவங்கும் சம்மந்தனுார் ஏரிக்கு சாத்தனுார் அணையில் இருந்து ஓலையாறு வழியாக தண்ணீர் கொண்டு வரவும். துறிஞ்சல் ஆற்றில் இருந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரவும் 229 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்தனர். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார்.
கடந்த ஆண்டு இத்திட்ட மதிப்பு 309 கோடியாக அதிகரித்தது. இதற்கு நிதி ஒதுக்கினால் அடுத்த சில ஆண்டுகளில் சாத்தனுார் அணையில் இருந்து நந்தன் கால்வாய் இணைக்கப்படும்.
இதன் மூலம் ஆண்டு தோறும் வீணாக கடலில் கலந்து வரும் 5 டி.எம்.சி., தண்ணீர் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஏரிகளுக்கு கிடைக்கும்.
திட்டம் நிறைவேறினால் மேலும் 50க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர முடியும். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பட்ஜெட் வெளியாகும் போது இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவார்கள் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த முறையும் விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் இதற்கு நிதி ஒதுக்கி விவசாயிகளின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.