/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் பறக்கும் படை கெடுபிடிகள் தளர்த்தப்படுமா? ... வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தேர்தல் பறக்கும் படை கெடுபிடிகள் தளர்த்தப்படுமா? ... வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேர்தல் பறக்கும் படை கெடுபிடிகள் தளர்த்தப்படுமா? ... வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேர்தல் பறக்கும் படை கெடுபிடிகள் தளர்த்தப்படுமா? ... வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 21, 2026 05:01 AM

விழுப்புரம்: தேர்தல் கண்காணிப்பில் உள்ள பறக்கும் படையினர், சோதனையின்போது உண்மை தன்மையைறிந்து, விவசாயிகள், வியாபாரிகளிடம் கெடுபிடியை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும், தலா 9 நிலையான கண்காணிப்பு குழுவினரும், தலா 9 பறக்கும் படை குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகள், பைபாஸ் சந்திப்புகள், மேம்பால பகுதிகள், டோல் கேட்டுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு குழுவினர், சாலை மார்க்கமாக வரும் பஸ், கார், வேன், ஆட்டோக்கள் போன்றவற்றை நிறுத்தி சோதனை செய்கின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைப்படி 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகை வைத்திருந்தால் அதனை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கின்றனர்.
பரிசு பொருள்கள் என்ற அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட சேலைகள், வேட்டிகள், பாத்திரங்கள், கிப்ட் பாக்ஸ்கள் என எது இருந்தாலும், அதனை பறிமுதல் செய்யும் நிலை உள்ளது.
அதிகாரிகள் சோனையின் போது கெடுபிடி காட்டுவதாக வியாபாரிகள், விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தங்க நகை ஒரு சவரன் 1.15 லட்சம் ரூபாய் விற்கிறது. சுப நிகழ்ச்சிகளுக்கான மண்டப வாடகை 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வருகிறது. சுப நிகழ்ச்சிக்கான பொருள்கள் வாங்கவும், மருத்துவ செலவிற்கு என குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையம் 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து, கண்காணிப்பு குழுவினர் மூலம் நெருக்கடி கொடுப்பதால் கடும் பாதிப்புக்குள்ளாகின்றோம்.
சந்தைகளில் விற்பனை பாதிப்பு விழுப்புரம் மாவட்ட சுற்று வட்டாரங்களில் மடப்பட்டு, மதகடிப்பட்டு, கூட்டேரிப்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் சந்தைகள் பிரபலம். வார சந்தைகளில் ஆடு, மாடுகள் விற்பனை முதல் பொருள்கள் விற்பனை வரை பல லட்சம் ரூபாய் வியாபாரம் நடந்து வருகிறது. இப்போது, தேர்தல் நெருக்கடி காரணமாக இந்த சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் தொகை எடுத்து வந்து வியாபாரம் செய்வது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இயல்பான இந்த பிரச்னைகள் கருதி, தேர்தல் ஆணையம் குறைந்த பட்ச தொகை .2 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும். அரசியல் கட்சியினர் பரிசு பொருள், பெருந்தொகை கொண்டு செல்வதற்கும், சாதாரண மக்கள், வியாபாரிகள் தங்கள் தேவைக்கு எடுத்துச் செல்வதற்கும் வித்தியாசத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
உரிய ஆவணங்கள் இருந்தால், ஸ்பாட்டில் விசாரித்து அனுப்பலாம் என மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார். ஆனால், வீட்டு உபயோக, வியாபார உபயோக சிறிய பொருட்கள் என்றாலும், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுகின்றனர்.
சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் அதனை திரும்பப் பெறவும், அதற்கு ஆவணங்களை தயார்படுத்தவும் அவதிப்படும் நிலை உள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர், இது குறித்து ஆலோசித்து, கண்காணிப்பு பணியின்பொது, சாதாரண மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதை தவிர்க்கவும், உண்மை தன்மையை ஆய்ந்து, ஆவணங்களை பெற்று அங்கேயே விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

