/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நான்கு வழிச்சாலை மேம்பால சுவர்களில் விரிசல்; அச்சத்துடனே பயணிக்கும் வாகன ஓட்டிகள்; நகாய் அதிகாரிகள் கவனிப்பார்களா?

ADDED : ஜன 26, 2025 05:18 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் - எம்.என்.குப்பம் இடையிலான நான்கு வழிச்சாலையில் மேம்பாலங்களின் பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே ஏற்படும் விரிசல்களால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
விழுப்புரம் _ நாகப்பட்டினம் இடையே 196 கி.மீ., துார நான்கு வழிச்சாலையில் விழுப்புரம் - எம்.என். குப்பம் இடையே 29 கி.மீ., தூரத்திற்கு சாலைப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதால் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இச்சாலையில், மதகடிப்பட்டு மேம்பாலத்தில் தென்புற சாலை இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி வருகிறது.
திருவண்டார்கோவில் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தடுப்பு சுவரில் உள்ள பேனல்கள் ஒரே சீராக இல்லாமல் உள்ளே வெளியே துருத்திக் கொண்டு வருகின்றன.
மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல பிரிக்கப்பட்டுள்ள சாலை மேடும் பள்ளமுமாகவும், சாலை ஓரங்கள் சில இடங்களில் உள்வாங்கியும் உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.
கண்டமங்கலம் மேம்பாலத்தில் தென்புற வழித்தடத்தில் 35 மீட்டர் துாரத்திற்கு சிமெண்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் அதை சரி செய்யும் பணி நடக்கிறது.
இவ்வாறு பல இடங்களில் சாலை மற்றும் மேம்பாலங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர்.
எம்.என்.குப்பம் மேம்பாலத்தில் பணிகள் முடிந்து தென்புற சாலையில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாலம் மற்றும் சாலை பணிகளை 'நகாய்' அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் பணிகள் தரமின்றி நடந்துள்ளது.
இச்சாலையில் கெங்கராம்பாளையம் அருகே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சுங்கச்சாவடி அருகே சாலையை விவசாயிகள் நெல் உலர்த்தும் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, நகாய் அதிகாரிகள் கவனம் செலுத்தி, சேதமான சாலைகளை சீரமைத்து சாலைகளின் தரம் தகுதியாக உள்ளதை உறுதி செய்த பின், கெங்கராம்பாளையம் டோல் பிளாசாவை திறக்க வேண்டும்.