ADDED : டிச 30, 2025 04:12 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்தை அபகரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 பிள்ளைகளுடன் பெண், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. காலை 10:30 மணிக்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர், திடீரென வாசலில் தனது 3 பிள்ளைகளுடன் அமர்ந்து தீக்குளிக்க முயன்றார்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி மனைவி ரோசா, 35; என்பதும், கணவர் இறந்த நிலையில், தனது 2 மகன், ஒரு மகள் என மூன்று பிள்ளைகளுடன் ஆதரவின்றி வசித்து வருவது தெரிந்தது.
மேலும், அவரது கணவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் அவரது சொத்துக்களை மாமனார், மாமியார் ஆகியோர் பறித்துக்கொண்டு அவர்களது மற்றொரு மகன் பெயரில் முழுமையாக எழுதி வைத்தனர். இது குறித்து கேட்கும்போது, எங்களை மிரட்டி அனுப்பி விட்டனர். இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லுார் போலீசில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும், பல மாதங்களாக மனு அளித்தும் விசாரிக்கவில்லை என்பதால், தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறி அனுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

